Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் படத்துடன் சுவரொட்டியை ஒட்டுகின்றனர். பின்னர் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் கேட்கின்றனர். தனிப்பட்ட செல்போன் எண் கேட்டு பெறுகின்றனர். அந்த எண் கொடுக்கப்பட்டதும் ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது.

திமுகவினர் அரசியல் பிரசாரத்துக்காக பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதம் என அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். திமுக பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருந்தார்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘ ‘‘ஓடிபியை எதற்காக கேட்கிறார்கள்? ஓடிபி விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்கையில் எதற்காக கேட்கிறார்கள்?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ‘‘திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

‘தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும் என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபியை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓடிபி விபரங்களை கேட்கக் கூடாது.

இவ்வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை மனுதாரர் தரப்பில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாகவும் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.