பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை : வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளர்க்க அறிவுறுத்தல்!!
சென்னை : பனை மரங்கள் வெட்டப்படுத்தவதை தடுக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூழல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கதர் கிராம தொழில் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையேற்ற வட்டார குழுவில் வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வட்டார அளவிலான குழு வயல் ஆய்வு மேற்கொண்டு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யும். இதன் பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட வேண்டி வந்தால், மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தை வெட்டும் போது, அதனை ஆய்வு செய்ய குழுவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு இணையாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.