Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு- ஜெர்மனியின் உறவுகளை மேம்படுத்த அம்மாநில அமைச்சர் மற்றும் அதிபரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு- ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய இரு மாநில உறவுகளை மேம்படுத்த அம்மாநில அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று (2.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் உள்ள வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் அவர்களை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு, இந்தியாவின் தொழில் மற்றும் சமூக ரீதியாக மிகவும் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு; ஜெர்மனியின் பொருளாதாரத்தில், உயர் மதிப்பு உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக விளங்கும் வடக்கு ரைன் ஆகிய இரு மாநிலங்களின் தலைமையை ஒன்றிணைத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் இடையேயான சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் துறையில் கூட்டாண்மைகள் மூலம் இரு மாநிலங்களும் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றன. தமிழ்நாட்டின் மிகவும் திறமையான மற்றும் படித்த இளைஞர்கள் ஜெர்மனியின் திறமையான மனிதவளத்திற்கான வளர்ந்து வரும் தேவைக்கு பங்களிக்க வழிவகை செய்வது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவாதித்தார், மேலும், இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் அவர்களையும், அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை கொண்ட குழுவினையும் தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு மற்றும் வடக்கு வெஸ்ட்பாலியா, பல்வேறு காரணிகளில் சமமானவை ஆகும். குறிப்பாக, இரண்டு மாநிலங்களும் வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் இயந்திரங்களுக்கான உற்பத்தி, காலநிலை மீள்தன்மை மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சி போன்றவற்றில் முக்கியத்துவம் அளிக்கின்றன. நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியால் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இரு மாநிலங்களும் இயற்கையான கூட்டாளிகள் ஆவர்.

இச்சந்திப்பின்போது முதலமைச்சர் அவர்களுடன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, பொறுப்பு துணைத் தூதர் விபா காந்த் சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் அவர்களுடன் வடக்கு வெஸ்ட்பாலியா மாநிலத்தின் மூத்த அலுவலர்கள் - மத்திய, ஐரோப்பிய, சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் மாநில சான்சலரி தலைவர் நத்தனேல் லிமின்ஸ்கி, ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான அரசு செய்தித் தொடர்பாளர் மற்றும் மாநில செயலாளர் திரு. கிறிஸ்டியன் வியர்மர், அமைச்சர்-அதிபரின் தலைமை அலுவலர் மார்செல் கிராத்வோல், சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநர் டாக்டர் பிராங்க் ஹோச்சாப்ஃபெல் மற்றும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் கொள்கை திட்டமிடல் பிரிவு அலுவலர் டாக்டர் மாக்சிமிலியன் கீக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ரூ.7020 கோடி முதலீட்டிற்கான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும், விரிவுபடுத்தவும் முன்வந்துள்ளன. இது தமிழ்நாட்டின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது ஐரோப்பிய பயணத்தின் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் முதலீட்டாளர் சந்திப்புகளை தொடர்வார்.