மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் நாட்டிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது: ஆளுநர் பேச்சு
சென்னை: நாட்டிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மருத்துவர் தின விழா- ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை செய்த மூத்த பல்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன், வரலாற்றில் இல்லாத வகையில் மக்களை வீடுகளிலேயே முடக்கியது கொரோனா பெருந்தொற்று. அப்போது அவர்களை பாதுகாத்தது மருத்துவர்கள் தான். மிகச்சிறந்த சேவை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். நமது மாநிலம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நம்மிடம் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றார்கள்.
ஏனென்றால் இங்கு கிடைப்பது சரியான சிகிச்சை மட்டுமல்ல, தொழில் தர்மமும் என அவர்களுக்கு தெரியும். அதிகமாக சாப்பிடக் கூடாது. துரித உணவுகளை தவிர்த்து, முறையான ஓய்வு, முறையான உடற்பயிற்சி இதை மட்டும் பின் தொடர்ந்தால் நோயிலிருந்து விலகி இருக்கலாம். பள்ளி மாணவர்களிடையே நலமுடன் வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் இந்த அறிவுரையை தவிர்ப்பார்கள், ஆனால் பெற்றோர்கள் அதை தவிர்க்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.