மற்ற மாநிலங்கள் எல்லாம் வியந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு உயர்ந்திருப்பதே திராவிட இயக்க சாதனை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: பகுத்தறிவுப் பகலவன் - அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல, மனித உரிமையின் அடையாளம், உலக அடையாளம். அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை.
இங்கிலாந்தில் இருக்கின்ற செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவரான வெங்கடாசலபதி முயற்சியால், பெரியார் குறித்த நூலை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதன் அடையாளம்தான் இது.பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. மானிடச் சமுதாயத்திற்கானது. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதுதான் பெரியாரியம்.
தந்தை பெரியாரின் உலகப் பயணங்களை சுருக்கமாக பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் என்றால், 1929ல் மலேசியா, சிங்கப்பூருக்கும் - 1932ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழுவதும் பயணம் செய்தார். அப்போது, இந்த இங்கிலாந்து நாட்டில், ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். இங்கேதான், கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் எழுதிய ‘மதம்’ என்ற நூலை வாங்கினார்.
இங்கே இருக்கின்ற பார்ன்ஸ்லே-வில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலாக பேசினார். அந்தக் கூட்டத்தில் இருந்த நிறைய பேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவர்கள். அப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழிலாளர் நட்பு ஆட்சியை நடத்துவதாக சொல்கிறீர்கள்.
ஆனால், இந்தியாவில் தொழிலாளர்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறீர்கள்” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்த துணிச்சல்தான் பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என்று எல்லோராலும் நினைக்கப்படுகிறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார். போற்றப்படுவார். அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை.
பகுத்தறிவு, பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயதிலேயே, 13 வயது பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்துவிட்டார். மறுமணத்துக்கு குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதையெல்லாம் மீறி, அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைத்தார். மாற்று சமூகத்தினரின் காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்தார்.
இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டது. அங்கேயும் உயர் சாதியினரின் ஆதிக்கம் இருப்பதைப் பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவை என்று அதிலிருந்து அவர் வெளியேறினார். அப்படி உருவானதுதான், இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற சுயமரியாதை இயக்கம்.
சமூகநீதி - பெண்களுக்கு சொத்துரிமை - தீண்டாமை ஒழிப்பு - பொது இடங்களில் பட்டியலினத்தவருக்கு தடை இருக்கக் கூடாது - நில உரிமை - கைம்பெண் மறுமணம் - தமிழுக்கு முக்கியத்துவம் - சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு - இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை, சீர்திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறது.
எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குகின்ற ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள். நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சிப் பெற்று, வெகுசன மக்களை கன்வின்ஸ் செய்து, அவர்களுடைய ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வைத்திருக்கிறது.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார் பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் அண்ணா. கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி.
இது எல்லாவற்றையும்விட, நான் பெருமையோடு சொல்கிறேன், சாதியைக் கடப்பதற்காக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பாக, அண்ணா “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும்”, தலைவர் கலைஞர் “சமத்துவபுரம்” திட்டத்தையும் கொண்டுவந்து, பெரியாரின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறோம்.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். இடஒதுக்கீட்டுக் கொள்கையை அனைத்து நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கவேண்டும். சமூக உரிமையில் அக்கறை கொண்ட அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
லண்டனில் இருக்கின்றேனா இல்லை, தமிழ்நாட்டில்தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த அழகான, அவசியமான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, எல்லோருக்கும் எல்லாம் செய்து, பெருமைப்படுத்தியிருக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* என்றென்றும் பெரியாரின் வழியில் திராவிட மாடல் அரசு தொடரும்: முதல்வர் உறுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு. தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - ரத்தம் சிந்தாத புரட்சிகள். இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி மற்றும் முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்; பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாக கிளைத்த திமுக ஆட்சியை பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் விக்னேஷ் கார்த்திக் அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.
ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதை கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றை செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்-நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது. உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியாரின் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும். சாதிக்கும் என்று கூறியுள்ளார்.