சென்னை: மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள 1794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(தொழிற்பயிற்சி கிரேடு 2) உள்ள பதவிக்கான நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். இப்பதவிகளுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை இணைய வழியாக (www.tnpscexams.in) விண்ணப்பிக்கலாம். அதில், திருத்தங்களை அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. இப்பதவிக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ், தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்பு திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு படித்திருக்க வேண்டும். தேர்வுக்கான முழு விவரங்களை www.tnpscexams.inல் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.