சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 16வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு மே 10-ந் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தும் அதிகாரிகள் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகள் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக, கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக சேலம் கலால் துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

