தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.1,752 கோடி உதவித்தொகை: வாரிய தலைவர் பொன்குமர் தகவல்
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் 41வது வாரிய கூட்டம் வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைவர் பொன்குமார் பேசியதாவது:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் துவங்கப்பட்ட 30.11.1994 முதல் 31.07.2025 வரை 27,46,572 தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, ரூ.2608 கோடி மதிப்பீட்டில் தனிநபர் விபத்து நிவாரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம், வீட்டு வசதித்திட்டம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிர் இழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான உதவித்தொகை, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகை (இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம்) மற்றும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
07.05.2021 முதல் 31.07.2025 வரையிலான காலத்தில் 15,74,116 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டதுடன் 20,60,699 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் தமிழகம் முழுவதும் ரூ.1752.01 கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.