தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ”தமிழ்நாடு முந்திரி வாரியம்” என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரித்து, வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச்செய்து உழவர்கள் நலன்காக்க பல்வேறு உன்னதத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்திட ஆணை வழங்கிய முதலமைச்சர் அவர்கள் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் “முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில்நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்” என அறிவிப்புச் செய்ய ஆணையிட்டதைத் தொடர்ந்து அவ்வாறே அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில் மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு முந்திரி வாரியம் கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இவ்வாரியத்தின் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத்தலைவராகவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் அவர்கள் உறுப்பினர் செயலராகவும், இயக்குநர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx), முதல்வர் (தோட்டக்கலை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முந்திரி பயிரிடும் மாவட்டங்களிலிருந்து அரசால் நியமிக்கப்படும் இரண்டு விவசாயிகள் உள்ளிட்ட 12 உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முந்திரி வாரியத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்திட வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அவர்களை தலைவராகவும், இயக்குநர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அவர்களை ஒருங்கிணைப்பாளராகவும், சிறப்பு செயலாளர் (நிதித்துறை), ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆணையர், தொழிலாளர் நலத்துறை, இயக்குநர், வேளாண்மைத் துறை, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நியமிக்கப்படும் 2 முன்னோடி முந்திரி விவசாயிகள் மற்றும் 2 முந்திரி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு நிர்வாகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளர்களின் நலன் காத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப வாரியத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டின் முந்திரி உற்பத்தி, முந்திரித் தொழிற்சாலைகளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளதால், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பதப்படுத்தப்படாத முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செய்து பதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையினை சீராக்கும் வகையில் முந்திரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் செயல்படும். இதன்மூலம் முந்திரி சாகுபடி, அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடர்பான புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்.
உழவர்களின் தேவைக்கேற்ப அதிக மகசூல் தரும் புதிய இரகங்கள், உரிய இயந்திர தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்குதல், உலகளவில் உள்ள அதிக மகசூல் தரும் இரகங்களின் நடவுச்செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், முந்திரிப் பயிர் தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு செயல்விளக்கம் அளித்தல், உழவர்களின் தேவைக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களைப் பிரபலப்படுத்த பயிற்சிகள் வழங்குதல், முந்திரி பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடர்பான நிதியுதவி மற்றும் திட்டங்கள் குறித்து உரிய ஆலோசனை வழங்குதல், முந்திரித் தொழிலாளர்களை சிறு குழுக்களாக (குறைந்தபட்சம் 10 நபர்கள்) ஒருங்கிணைத்து தொழிலாளர் நலத்திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நல நிதி பெறுவதற்கான உரிய ஆலோசனை வழங்குதல், முந்திரிக்கான சேமிப்பு வசதிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் மதிப்பு சங்கிலி (Value Chain) குறித்த ஆலோசனை வழங்குதல், முந்திரி ஏற்றுமதி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தகுந்த வாய்ப்புகளை நெறிமுறைப்படுத்துதல், முந்திரி சார்ந்த மதிப்புக்கூட்டுதல் மேற்கொள்ளும் நபர்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதிக்கு ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகள் தமிழ்நாடு முந்திரி வாரியத்தால் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பயன்பெறுவதுடன், முந்திரித் தொழில் மேம்படும்