சென்னை: மேலப்பாளையம் சார்பதிவாளர் சஸ்பெண்டை கண்டித்து மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சார்பதிவாளராக(பொறுப்பு) இருப்பவர் காட்டுராஜா. இவர், பிரிக்கப்படாத 21 சென்ட் நிலத்தை பதிவு செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் நெல்லை மாநகர மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்காக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் மீது போலீசார் எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணை மட்டுமே நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதேபோல கடலூர் மண்டலம் வடலூர் சார்பதிபாளர் பொறுப்பு சுரேஷ் என்பவரையும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் சஸ்பெண்ட் செய்துள்ளார். இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பதிவுத்துறை அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓராண்டுக்குள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்துள்ள உயர் அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு வசூல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பதிவுத்துறையில் சாதி சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சாதிய அடக்குமுறை அந்த துறைகளில் அதிகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், உயர் அதிகாரிகளை உடனடியாக பணி மாற்றம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் சார்பதிவாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். காலை முதல் மாலை வரை அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக பதிவுத்துறை விவகாரங்களில் தலையிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்க இருப்பதாக பதிவுத்துறை ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பதிவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘பதிவுத்துறை தலைவர், திருநெல்வேலி மேலப்பாளையம் சார் பதிவாளர் (பொறுப்பு) காட்டு ராஜா, கடலூர் மண்டலம் வடலூர் சார் பதிவாளர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாக உள்ள நிலையில் தற்போது ஒரே நாளில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பணியாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களின் பணியிடை நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பணியிடை நீக்க உத்தரவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் இன்று அனைத்து பணியாளர்களும் தங்கள் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். பணியிடை நீக்கத்தினை ரத்து செய்து உடனடியாக பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களை அறிவித்து இயக்க நடவடிக்கை மேற்கொள்வது என கூட்டு நடவடிக்கை குழுவானது முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தனர்.