Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக பாஜவில் தான் இந்த கூத்து கட்சி தலைவரையே தெரியாத பாஜ பூத் கமிட்டி நிர்வாகிகள்

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ தமிழகத்தில் ஆழமாக கால் பதிக்க வேண்டும் என்ற உத்தரவை அமித்ஷா பிறப்பித்துள்ளாராம். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அதை எதிர்த்து களமாடுவதற்கு என்ன வியூகம் வகுக்கலாம் என்பது பாஜ தலைமையின் தற்போதைய ஆலோசனையாக உள்ளது. தேர்தலுக்கு பலத்த ஆயுதமாக இருப்பது பூத் கமிட்டிகள் தான். அவற்றை முறையாக நடத்த வேண்டும் என்று ஏற்கனவே தமிழகத்தில் பாஜ தலைவராக இருந்த அண்ணாமலைக்கு அப்போது அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கையை பாஜ நடத்தியது.

அப்போது முதல் பூத் கமிட்டி உள்ளிட்ட நடவடிக்கைளையும் தொடங்கியது. அவர் தலைவராக இருந்த போது பல்வேறு பில்டப்களை கொடுத்ததால் தமிழகத்தில் பாஜ வேரூன்றிவிட்டது என்றே பாஜ தலைமை எண்ணியது. ஆனால் நடந்ததோ வேறு. பரபரப்பான பேச்சுகளால் மட்டுமே மக்களை கவர்ந்து வந்த நிலையில், கட்சி பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை பாஜ மேலிடம் கண்டுபிடித்தது. அதுவும் வலுவான கூட்டணியை ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் மேலிட நிர்வாகிகள் முன்வைத்தனர். கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபவதை விட அவர் செய்தது எல்லாம் பாஜவின் முக்கிய நிர்வாகிகளை காலி செய்வதும், பொய்களை பரப்புவதற்காக தனக்கென்று வார் ரூம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னை மட்டுமே பிரபலபடுத்துவதுமாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் பெரும்பாலும் போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், மாவட்டத்துக்கு ஒரு லட்சம் வீதம் இலக்கு வைத்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெறும் 10 ஆயிரத்துக்கு குறைவாகவே உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். அதிலும் பெரும்பாலும் போலி உறுப்பினர்கள் என்பது பாஜ தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல, பூத் கமிட்டி அமைப்பதிலும் அண்ணாமலை காலகட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்காமல் ஏனோ தானோ என்று நடத்தியிருப்பது தற்போதைய கட்சி தலைமையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பாஜ மேலிட தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அண்ணாமலையை மாற்றி விட்டு நயினார் நாகேந்திரனை கட்சி மேலிடம் தமிழக பாஜ தலைவராக நியமித்துள்ளது. அவருக்கு அமித்ஷாவால் வழங்கப்பட்ட முதல் உத்தரவே பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்பது தானாம். இதனால் அதிரடியாக களம் இறங்கிய நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டி பட்டியலை எடுத்து நேரடியாகவே ஆய்வு செய்ய தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பூத்களில் ஆய்வு செய்துள்ளார். இந்த பூத் கமிட்டிகள் போலியாக இருந்தது தெரியவந்துள்ளது. பெயரளவில் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரை கமிட்டி நிர்வாகிகளாக போட்டிருப்பது தெரியவந்துள்ளது. சில நிர்வாகிகளுக்கு போன் செய்தால், அவருக்கு கிடைக்கும் பதில்களை பார்த்தால் ஒரு நிமிடம் தலைசுற்றும் அளவில் உள்ளதாம்.

பூத் கமிட்டி என்ற பெயரில் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பெயர்களை எல்லாம் சேர்த்துள்ளனர். மாற்று கட்சியினர் கூட இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் மேலான பூத் கமிட்டிகள் போலியானது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் நந்திமரத் தெருவில் நடைபெற்ற பாஜ பூத் கமிட்டி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரத்தை நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தார். அப்போது பூத் கமிட்டி கூட்டத்திற்கு வந்த பாஜ நிர்வாகி ஒருவர், ‘சோறு கூட போடுறோம், ஆனால் பாஜவுக்கு ஓட்டு போட மாட்டோம்’ என்று பொது மக்கள் கூறியதாக நயினார் நாகேந்திரனிடம் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பாஜ பூத் கமிட்டியில் இடம்பெற்றிருந்த குமார் என்பவருக்கு போன் செய்த போது, ‘நான் கட்சியிலே கிடையாது, எனது நண்பர் சவுண்டு சர்வீஸ்காரர் ஒருவர் எனது பெயரை சேர்த்திருப்பார் போல’ என்று நயினாரிடம் சொன்ன விவகாரமும் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை தந்தது. ஆனால் பூத் பட்டியலில் அவரது பெயரும் செல்போன் எண்ணும் பக்காவாக இடம்பெற்றுள்ளது. இப்படி உறுப்பினர் சேர்க்கையிலும் சரி, பூத் கமிட்டி அமைப்பதிலும் சரி எல்லாமே கடந்த காலங்களில் பெயருக்கு மட்டுமே நடந்துள்ளதை கண்டு நயினார் நாகேந்திரன் நொந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் தலைவரையே தெரியாத நிர்வாகிகள் அதிக அளவில் தமிழக பாஜவில் இடம்பெற்றிருப்பது பாஜ தலைமை கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். பெரிய அளவில் கட்சி மேலிடத்தில் பில்டப் எல்லாம் செய்து காய் நகர்த்தி வந்த அண்ணாமலையின் பூத் கமிட்டி விவகாரம் இப்போது டெல்லியில் பற்றி எரிவதாக பாஜவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.