Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மற்ற மாநிலங்களை விட சிறப்பான இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: ‘‘உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திராவிட இயக்கம்தான் காரணம். இந்த அடித்தளத்தை அமைத்தவர் கலைஞர்தான். உயர்கல்விக்காக அதிகம் செய்தவர் அவர்தான். அதன் தொடர்ச்சியாக இந்த திராவிட மாடல் அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்களை விட சிறப்பான இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது’’, என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவ-மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 21 பேர் 38வது பட்டப் பிரிவின் கீழும், 8 பேர் 39வது பட்டப் பிரிவின் கீழும் இன்று நேரடியாக பட்டங்களை பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு பட்டம் பெற்ற மாணவர்களின் வாழ்வின் முக்கியமான நாள் இந்த நாள். பெற்றோர் ஆசிரியர்களைப் போல நானும் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் கைகளில் தற்போது பெற்றுள்ள பட்டங்கள் வெறும் பேப்பர் அல்ல. அது உங்களின் உழைப்பு. உங்கள் கல்வி மற்றும் அறிவுத் திறனின் அங்கீகாரமாக இருக்கிறது. உங்கள் குடும்பங்கள் கண்ட கனவு மெய்யாகும் நாள் இன்று. பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் செயல்படும் இந்த நிறுவனம் பெல் நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இது உலகப் புகழ் பெற்றதாக இருக்கிறது.

மேலாண்மைக் கல்வியில் இந்திய அளவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதில் படித்தவர்கள் உலக அளவில் பல தொழில் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றனர். நீங்களும் அந்த பட்டியலில் இடம் பெற வேண்டும். தமிழக முதல்வர் புத்தாக்க திட்டம் மாநில திட்டக் குழு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பம், சிம்டிஏ, நிறுவனத்துறை ஆகியவற்றின் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் என்ஐஆர்எஸ்சில் பல குறியீடுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. இப்படி உயர்கல்வியில் சிறந்து விளங்க யார் காரணம். திராவிட இயக்கம்தான். இந்த அடித்தளத்தை அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். உயர்கல்விக்காக அதிகம் செய்தவர் அவர்தான். அதன் தொடர்ச்சியாக இந்த திராவிட மாடல் அரசும் ஏழை-எளிய மாணவர்களும் உயர்கல்வி பெற புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் ஆய்வுத் திட்ட நிதி உதவி, மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள், என பல முன்னணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வளர்ந்து வரும் உலக வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும் நாம் காலாவதியாகிவிடுவோம். தலைமைப்பண்பு என்பது அவர்கள் வகிக்கும் பதவிகளில் அல்ல. அவர்கள் உருவாக்கும் நேர்மறையான எண்ணம்தான். வெற்றி மற்றும் ஒழுக்கத்துக்கும் இடையே இடையே சமநிலை அவசியம் தேவை. எத்தனை வளர்ச்சிவந்தாலும் அடிப்படை என்றும் மாறாது.

பல புத்தகங்களை படிப்பதை விட, எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும் மேலாண்மை பாடங்கள் திருக்குறளில் இருக்கிறது. எந்த துறையிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, ‘அறிவுடையார் ஆவது அறிவார்’ என்கிறார் திருவள்ளுவர். இந்த திறமை இல்லாதவர்கள் ஒரு கட்டத்தில் முடங்கிவிடுவார்கள். சாதக பாதங்களை யோசிக்காமல் சரியான திட்டம் இல்லாமல் இறங்கினால் பாதிப்புதான். அதனால் ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிறார் வள்ளுவர். எவ்வளவு பெரிய சிந்தனையாக இருந்தாலும் நேரம், காலம் முக்கியம். அதைத் தான் காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படி செய்தால் தான் முடிக்க முடியும். சரியான நபரை போட்டால் தான் அதில் வெற்றிபெற முடியும் என்பதற்காக ‘இதனை இதனால் இவன் முடிக்கும்’ என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அறம், வாய்மை இரண்டையும் தவறவிடக்கூடாது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த வாழ்க்கை பாடத்தை நீங்கள் மறக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் நேர்மை, நம்பிக்கை பொறுப்பு போன்ற விழுமியங்களை கைவிடக்கூடாது. இது வாழ்வை உயர்த்த அடித்தளமாக இருக்கும். பாவேந்தர் கூற்றுப்படி ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்.

எங்கே சென்றாலும் புதுமையாக, தெளிவாக செயல்பட வேண்டும். கல்வி கற்றலுக்கான முடிவு இது அல்ல. இன்னும் கற்றலுக்கான தொடக்கம் இது. மாற்றத்துக்கான தலைவர்களாக நீங்கள் வர வேண்டும். நீங்கள் உயர, உயர வரும் போது உங்களுக்கும் கீழ் உள்ளவர்களையும் நீங்கள் கை கொடுத்து தூக்கி விட வேண்டும். இதுதான் உண்மைான தலைமைப் பண்பு வாழ்க்கை. அறிவு, மனிதநேயம், புதுமை, சமூகப்பணி ஆகியவற்றை பிரதிபலிக்கும் சிந்தனையை எட்டுத் திக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் கடல்கடந்து சென்று வாணிபம் செய்தும், வெற்றி கண்ட இனம் நம் இனம். இன்றைய நவீன உலகில் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக நீங்கள் வர வேண்டும், பல புதிய நிறுவனங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இதுதான் என் ஆசை மற்றும் கனவாக இருக்கிறது. பல முன்மாதிரிகளை பார்த்து வளரும் நீங்கள் மற்றவர்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாக இருங்கள். ‘பெரிய அளவில் கனவு காணுங்கள், கடுமையாக உழையுங்கள்,எளிமை மற்றும் இரக்கத்துடன் இருக்க வேண்டும்’. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.