Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 121வது பிறந்த நாள்; அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்கள்!

தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 27.9.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.09.1905 அன்று பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளார்.

1942ஆம் ஆண்டு முதன்முதலாக 'மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும். பின்னர் 'தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு செய்தும்கூட, இவர் தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர். தடை 1942ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் மதுரையில் 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, 'மாலை மலர்' என்ற மாலைப் பத்திரிகையையும் 'ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். 1947ஆம் ஆண்டில் 'தினத்தாள்' பத்திரிக்கையும், அடுத்த ஆண்டில் 'தினத்தூது' பத்திரிகையையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச் சொற்கள். சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள். கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டார். சி.பா.ஆதித்தனார் அவர்கள் தம் நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார்.

1942ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் 1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்று கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்கள் ஏடு நடத்துவோர்க்கும். எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27ஆம் நாள் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் கொண்டாடப்படும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.