தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய கலைஞருக்கு பாரத ரத்னா விருது : திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை
டெல்லி : ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், திராவிட சித்தாந்தத்தின் ஒளி விளக்காக திகழும் திகழ்ந்தவர் கலைஞர் என்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்படும் பல முற்போக்கு கொள்கைகளை செயல்படுத்தியவர் கலைஞர் என்றும் கூறினார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அரசியல் மற்றும் இலக்கிய திறன்களால் முதலமைச்சராக உயர்ந்தவர் கலைஞர் என்றும் இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் கலைஞர் என்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.
மேலும் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், "திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர். சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கலைஞர். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சாம்பியன் கலைஞர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் செயல்பட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர், தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்றவர். கலைஞரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை அவருக்கு வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.


