சென்னை: சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கமல் தெரிவித்த கருத்தை பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக மநீம கட்சிபொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை: மதிப்புவாய்ந்த பதவி வகித்தவர்கள் மனம்போன போக்கில் பேசுவதா? மநீம கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு கூறிய பதிலைத் திரித்து, தேவையற்ற பிரச்சினையைத் தொடங்கியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஒருவர் என்ன கூறியுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பத்திரிகையாளர் கேள்விக்கு தன் மனம்போன போக்கில் பதில் கூறுவது, அவர் இதுவரை வகித்த பதவிகளுக்கு அழகல்ல. தான் எதையாவது கூறி செய்திகளிலும், அரசியலிலும் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவே அவர் முயற்சிக்கிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. எங்கள் தலைவர் என்ன கூறினார் என்பதை அவர் அளித்த பேட்டியை பார்த்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிந்துகொள்ள வேண்டும்.