Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் இயக்குனர் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் ஓய்வு: ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசரிப்பு விழா

சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு காவல்துறை சார்பில் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசரிப்பு விழா நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். பவானிஅரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் படித்தார். கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டிலேயே நிறுத்திவிட்டு, லயோலா கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

ஐபிஎஸ்சில் சேர்ந்த பிறகு வணிகச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். குற்றவியல் சட்டத்தில் பிஎச்டி முடித்தார். 1990ல் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியானார். தர்மபுரி மாவட்டத்தில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கி எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணைக் கமிஷனராகவும், மதுரை மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். 1998ல் மாநில சிறப்புப் பிரிவு எஸ்பியானார். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையிலும் சிறிது காலம் பணியாற்றினர்.

பிறகு, சிபிஐக்கு சென்றார். ஐஜியாக பதவி உயர்வு பெற்ற அவர், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் மற்றும் சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் இருந்தார். கோவை போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். 2015ல் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஏடிஜிபியாகவும் சிறப்பாக பணியாற்றினார்.

தொடர்ந்து 2017 மே 15ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்று 2020 ஜூலை 1 வரை பணியாற்றினர். அவரது பணிக்காலத்தில்தான் சென்னை மாநகரம் முழுவதும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், இன்றுடன் பணி முடிந்து ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதனுக்கு பிரிவு உபசார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை நடக்கிறது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஓய்வு பெறும் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதனின் மனைவி சீமா அகர்வால் டிஜிபியாக தற்போது பணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.