Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழைக் காக்கும் நம் பற்று அவ்வளவுதானா?.. ' ழ' கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்க தெரியவில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்!!

மதுரை : தமிழைக் காக்கும் நம் பற்று அவ்வளவுதானா? ' ழ' கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்க தெரியவில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மதுரை கே.கே. நகரைச் சேர்ந்தவெரோனிக்கா மேரி, உயர் நீதிமன்றமதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, " தமிழகத்தில் மூளைச்சாவு அடைவோரிடம் இருந்து தானமாகப் பெறப்படும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குத் பொருத்த தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 3 ஆண்டுகளுக்குள் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உட்பட 6 அரசு மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ளன.இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட கல்லீரல்கள் தானமாகப் பெறபட்டுள்ளன. இதில் 94 கல்லீரல்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 91 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் மதுரை அரசுமருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை. அதேநேரத்தில், மதுரையைச் சுற்றியுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 'ராசாசி' என குறிப்பிடப்பட்டிருந்ததை கண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியன், தமிழைக் காக்கும் நம் பற்று அவ்வளவுதானா? தமிழுக்கான சிறப்பு என கூறப்படும் சிறப்பு ' ழ' கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்க தெரியவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,"மருத்துவக் கல்லூரிகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டமைப்பு உத்தரவை நடைமுறைப்படுத்த எவ்வளவு நாள் ஆகும்? என்று சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிடுகிறோம், "இவ்வாறு உத்தரவிட்டனர்.