Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திட்டங்களின் செயல்பாடுகள் எப்படி..? துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அலுவலக கூட்டரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கல்லூரி கனவு திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், உள்ளிட்ட பல திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. நான் முதல்வன் சாரணர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம், தென்கொரியா நாட்டின் பூசன், கோச்சான் பல்கலைக்கழகங்கள், தர்ஹம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் தரவு அறிவியல், ஏஐ, பயோ டெக்னாலஜி போன்ற துறைகளில் உலகளாவிய தொழில்முறை பயிற்சி அளிக்கப்பட்டு பேங்க் ஆப் நியூயார்க், சாகோ, எச்சிஎல், டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, “கார்ப்பரேட் தன்னார்வத் தொண்டு மூலம் வேலைவாய்ப்பு தயார்நிலை பயிற்சி”அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில் துறையின் நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டி, வேலைவாய்ப்பிற்கு தேவையான அத்தியாவசிய திறன்களை பகிர்ந்து பயிற்சி வழங்குகின்றனர். தற்போது காக்னிசென்ட், எச்டிஎப்சி வங்கி, ேபார்ட் உள்ளிட்ட 28 முன்னணி நிறுவனங்களின் 131 நிபுணர்கள் 22 அரசு கல்லூரிகளை சேர்ந்த 3,899 இறுதியாண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளனர். தமிழ்நாடு திறன் போட்டி பயிற்சி மூலம், இந்திய திறன் போட்டியில் தமிழ்நாடு, கடந்த ஆண்டில் 40 பதக்கங்களை வென்று 3ம் இடத்தினை பிடித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 3,60,389 இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நான் முதல்வன் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வுகள் பிரிவின் கீழ் அரசு பணிகளில் பணிவாய்ப்பு பெறுபவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்கள் அவர்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் திறன் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.