*நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமாக செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்படி, அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு செயல்படுத்தப்படும் இ- நாம் செயலி திட்டம் குறித்து கேட்டறிந்தார். மேலும், நெல் தரம் பிரிக்கும் பகுப்பாய்வு கூடத்தை பார்வையிட்டு தரம் பிரிப்பது குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தார்பாலின், பவர் டில்லர், பவர் வீடர், உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணைத்திடல், தெளிப்பான், மழை தூவான், வேளாண் இயந்திர மையம் ஆக்கல் இயக்கம் திட்டத்தில் பவர் டில்லர், வைக்கோல் கட்டும் இயந்திரம், தென்னை நாற்றுகள் என மொத்தம் 42 பேருக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரகலா, வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், துணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் திலகவதி(வாலாஜா), ராமன்(திமிரி) சூர்ய நாராயணன்(ஆற்காடு), வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கலைச்செல்வி, வேலூர் விற்பனை குழு செயலாளர் பாஸ்கரன், அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குனர் சந்தியா, உதவி இயக்குனர் பசுபதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி செயற் பொறியாளர் ரூபன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில் ரோப் கார் நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் குழு உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ரோப் காரில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது, மலைக்கோயில் மற்றும் ரோப் கார் நிலையம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக, சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிககு சென்று தமிழ்நாடு சட்டப்பேரவை கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, முதலமைச்சர் கோப்பை- 2025 கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் செல்ல உள்ள மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது, கலெக்டர் சந்திரகலா, சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், தாசில்தார் செல்வி, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், ஆணையாளர் நந்தினி, முதன்மைக் கல்வி அலுவலர் பிரேமலதா (பொ), இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனிதா, வேலூர் உதவி ஆணையர் சங்கர், கோயில் உதவி ஆணையர் ராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஆற்காடு: ஆற்காடு பஸ் நிலையத்தில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகள் நிதி 2022- 23ல் ₹9.65 கோடி மதிப்பில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், கலெக்டர் சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாஜ்புரா பகுதியில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் சார்பில் ₹35 கோடி மதிப்பில் ஆற்காடு நகருக்கான பைபாஸ் சாலை அமைத்தல் பணியை ஆய்வு செய்தனர்.
அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு இணை செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் பாலசீனிவாசன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சிகளில் மண்டல நிர்வாக இயக்குனர் நாராயணன், நகராட்சி ஆணையர்(பொ) வேலவன், தாசில்தார் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.