பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் கடந்த அக்டோபர் மாதம்19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசிய இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-2025ல் கபடி விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுப்போட்டித் தொடராக (Round Robin) நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு 7 அணிகள் ரவுண்ட் ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. இதில் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் அசத்தலாக ஆடி ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன.
இதில் ஆடவர் அணியில் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகந்தாஸ் மற்றும் மகளிர் அணி பிரிவில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ரமேஷும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் என்பவர் 2019 முதல் 2025 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேனியில் உள்ள விளையாட்டு விடுதியில் முறையான பயிற்சி பெற்று தனது திறனை வளர்த்துக்கொண்டவர். அதேபோல் சென்னை கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் கார்த்திகா தமிழக அணியின் கேப்டனாக 5 முறை களமிறங்கி பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். தற்போது பஹ்ரைனில் நடந்த போட்டியில் வைஸ் கேப்டனாகச் செயல்பட்டு சிறப்பாக விளையாடி மகளிர் அணியின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்துள்ளார். கபடி போட்டியில் தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கபடிக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை தேர்வாகி முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்த கண்ணகிநகர் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
