Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் கூலித் தொழிலாளியின் மகள், விவசாயி மகனுக்கு மருத்துவ சீட்

*தமிழக முதல்வருக்கு நன்றி

குஜிலியம்பாறை / கொடைக்கானல் : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள கூலித்தொழிலாளி மகள், விவசாயி மகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே டி.கூடலூர் ஊராட்சி பூசாரிபட்டியை சேர்ந்தவர் பிருந்தா (18). இவரது தந்தை முருகேசன் (52) கரூர் தனியார் நூற்பாலை கூலித்தொழிலாளி. தாய் தனலெட்சுமி (45) ஊரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மாணவி பிருந்தா 1 முதல் 5ம் வகுப்பு வரை பூசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்தார்.

பின்னர் சேர்வைகாரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024ல் பிளஸ் 2 படித்து 578 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பிடித்து நீட் தேர்வுக்கு தயாராக இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ாளர். இவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மாணவி பிருந்தா கூறுகையில், ‘‘சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என ஆசை. மிக கஷ்டமான குடும்ப சூழ்நிலையிலும் பெற்றோர் என்னை படிக்க வைத்தனர்.

பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த, என்னை நீட் தேர்வு தேர்வுக்கு தயார்படுத்த என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் செலுத்தி, என்னை தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்தனர். முதல் முயற்சியில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்து படித்தேன்.

தற்போது எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசு ஒதுக்கீடு என்னை போன்ற கிராமப்பகுதி மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக உள்ளது. நான் தான் எங்கள் ஊரில் முதல் எம்பிபிஎஸ். அது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழக முதல்வருக்கு மிகவும் நன்றி’’ என்றார்.கொடைக்கானல் அருகே பூம்பாறையை சேர்ந்தவர் இளையராஜா. விவசாயி. இவரது மூத்த மகன் யாதேஷ், அரசு பள்ளியில் படித்து 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 525 மதிப்பெண் பெற்றார்.

அதன்பின் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் விடாமுயற்சியாக மீண்டும் நடப்பாண்டு நீட் தேர்வு எழுதி 416 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் யாதேஷிற்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான சேர்க்கை ஆணை கிடைத்துள்ளது. இவருக்கு பெற்றோர், நண்பர்கள், கிராமத்தினர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

யாதேஷ் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. முதல்வருக்கு மிக்க நன்றி. இது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. டாக்டராகி எங்களது மலைக்கிராமங்களுக்கு சேவை செய்வேன். இதுவே எனது லட்சியம்’’ என்றார்.