Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத்துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவுத்துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

சட்டமன்றப் பேரவைத் தலைவர்

மு.அப்பாவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் (20.11.2025) திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நேருஜி கலையரங்கில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாநில அளவிலான விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு அரசில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பெருமை உண்டு. எந்த துறையையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில் கூட்டுறவுத்துறை என்றால் அதற்கு பல சிறப்புகள், பல பெருமைகள் உண்டு என்றால் அது மிகையாகாது. நம்முடைய மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் நம்முடைய கூட்டுறவுத்துறைக்கு சிறப்புகள் உண்டு என்பதை நான் இங்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் மிக நீண்ட வரலாற்றையும், சிறந்த பராம்பரியத்தையும் கொண்டதாகத் திகழ்கிறது. எவ்வாறு தமிழர்களின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு எல்லாம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளதோ அதே போன்று நம் கூட்டுறவுத்துறையும் வரலாற்றைக் கொண்டுள்ளது. உலக அளவில் இங்கிலாந்து நாட்டில் துவக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு 125 ஆண்டுகளை எட்டிப்பிடித்த ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது கூட்டுறவுத்துறை.

கூட்டுறவின் தத்துவமான கூட்டுறவு நாட்டுயர்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மெய்ப்பின்கின்ற துறைதான் இந்த கூட்டுறவுத்துறை. கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரையில் உள்ள மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்கின்ற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகின்றது. எல்லா தொழில்களுக்கும் முதலீடு தேவை. தொழில் சிறக்க குறைந்த வட்டியில், சில நேரங்களில் வட்டியும் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு கடன்களை வழங்கி வருகிறது கூட்டுறவுத்துறை என்பதை பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன். அடித்தட்டுமக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்கின்ற அமைப்பு கூட்டுறவு. 30க்கும் மேற்பாட்ட சேவைகளை கூட்டுறவுத்துறை வழங்கி வருகின்றது. மாணவ, மாணவியர்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதற்கு பட்டப்படிப்புடன் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பும் அவசியமாகின்றது.

அதற்கான 24 மாவட்டங்களில் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் படித்து வரக்கூடிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் அளித்து வருகின்றது. முதலமைச்சர் பெறுப்பேற்ற பிறகு இதுவரை 17 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்த துறை என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அன்றாட மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பு தான் கூட்டுறவுத்துறை. தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 20 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களோடு தொடர்புடைய துறை இந்த கூட்டுறவுத்துறை. பொதுமக்களுக்குத் தேவையான குடிமைப் பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணியினையும் கூட்டுறவுத்துறை மேற்கொண்டு வருகின்றது. 37,000 நியாய விலைக் கடைகள் இத்துறையின் மூலம் சிறப்பாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் பாராட்டுகளையும், ஒன்றிய அரசின் பாராட்டுகளையும் பெறக்கூடிய அளவில் நிர்வாகம் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

கிராமபுரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பல்வேறு நிலையிலான வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு, பால் உற்பத்தியாளர்களுக்கு என அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதி உதவிகளை இத்துறை செய்து வருகின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் விவசாயிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டனரோ, அதே போன்று தற்போது முதலமைச்சர் தலைமையிலான ஆட்சிகாலத்திலும் விவசாயிகள் பாதுகாக்கப் பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இருந்த உணவுப் பஞ்சம் இனி எப்போது வந்து விடக்கூடாது என்ற நிலையில் அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் விவசாயிகளை, விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியினை மேற்கொண்டு வெற்றி கண்டார்கள். அன்னாரது மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற் கலைஞர் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகளைத் தந்து அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சர் கலைஞர் . அன்றைய காலகட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற சுமார் ரூபாய் 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். அந்த முன்னோடித் திட்டம் ஒன்றிய அரசிடம் கொண்டு செல்லப்பட்டு, பின்னாளில் இந்திய முழுவதும் ஒன்றிய ஆட்சியாளர்களால் சுமார் ரூபாய் 70 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாட்டு விவசாயிகளை மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவில் விவசாயிகளை காத்த திட்டத்தின் பிதாமகனாக விளங்கியுள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞர் வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக சுமார் ரூபாய் 12 ஆயிரம் கோடி வரை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்கள்.

அதேபோல பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நிலுவையிலிருந்த பொது நகைக்கடன்களில் மொத்த எடை 5 பவுன் (40 கிராம்) வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு ரூ.4903.80 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.2119.23 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெருக்கடி நிலையிலும் அது வெள்ளமானாலும், புயலானாலும், கொரோனா போன்ற பெருந்தொற்றானாலும் மக்களுக்குத்தேவையான உதவிகளை அவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் துறையாக கூட்டுறவுத்துறை உள்ளது. முதலமைச்சர் எவ்வாறு மற்ற துறைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தந்துள்ளாரோ, அதேபோன்று, கூட்டுறவுத்துறையும் அவரது வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் கூட நம்மைப்பற்றி பாராட்டக்கூடிய துறையாக இந்த துறை சமீபத்தில் உருவாகியுள்ளது. குறிப்பாக, தேசிய அளவில் ஒன்றிய அரசின் சார்பின் எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் 5 கேடயங்கள் நமக்கு கிடைத்துள்ளது. நமது செயல்பாடுகளால் கூட்டுறவுத்துறைக்கு 5 விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அகில இந்திய அளவில் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், பதிவாளர்களை அழைத்து, கூட்டுறவுத்துறையில் ஒன்றிய அரசில் பொறுப்பு வகிக்கக்கூடிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், ”தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே, தமிழக கூட்டுறவுத்துறையை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்கள். இது நமக்கெல்லாம் கிடைத்திருக்கின்ற பெருமை.

கலைஞர் ஆட்சி காலத்தில் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் பாரட்டியது. தற்போது ஒன்றிய அரசின் பாரட்டுகளைப் பெற்று முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எல்லா வகையிலும், மக்களோடு பின்னிபிணைந்த ஒரு துறையாக இந்த கூட்டுறவுத்துறை இருப்பது மட்டுமல்ல செயல்பாடுகளில் சிறந்த துறையாகவும் இருந்து வருகின்றது. கூட்டுறவை நாம் வளர்க்க வேண்டும். அந்த கூட்டுறவால் நாம் வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற இந்த நல்ல நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். கடன் பெறுவதற்கு மட்டும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தேவை என்ற நிலையை மாற்றி நம்முடைய சேமிப்பைகளையும் பொதுமக்கள் மற்ற வங்கிகளுக்கு தருகின்ற முன்னுரிமையை விட கூடுதலாக கூட்டுறவு வங்கிகளுக்கு தந்து, உங்களது சேமிப்புகளை, வங்கி வரவு செலவுகளை இந்த கூட்டுவங்கிகள் மூலம் வைத்துக்கொள்வீர்கள் ஆனால், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை இன்னும் அதிக சேவைகளை வழங்க ஏதுவாக இருக்கும்.

இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் கூட்டுறவு வங்கிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உறுதி கொள்ள வேண்டும். பன்மையும், தொன்மையும் உள்ள கூட்டுறவுத்துறை மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றிட உறுதிகொள்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்கள். முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கூட்டுறவின் அவசியத்தையும் விளக்கும் ”கூட்டுறவு ஜோதி” தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்து, ”கூட்டுறவு ரதம்”, கூட்டுறவு திட்டங்களை விளக்கும் விளம்பர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, உரிமம் பெற்ற 6 மகளிர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவினை (e-Auto) வழங்கினார்கள். கூட்டுறவின் மகத்துவத்தை விளக்கும் கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு உறுதி மொழி, கூட்டுறவு தன்னார்வாலர் படை உறுப்பினர்கள் உறுதிமொழியினையும் எடுத்துக்கொண்டு, கூட்டுறவுதுறையின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

பின்னர், விழா மேடையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கூட்டுறவு கீதத்தை எழுதிய ஆனந்த செல்வன் அவர்களுக்கு ரூ.50,000-க்கான பரிசுத் தொகை மற்றும் சிறப்பு கேடயம் வழங்கினார்கள். மேலும், மாநில அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வுகளில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் , மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், இ.ஆ.ப., , கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மு.வீரப்பன், இ.ஆ.ப., , மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் , கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் முனைவர்.க.சொ.இரவிச்சந்திரன், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, திருநெல்வேலி இணைப் பதிவாளர் முருகேசன் உட்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவாளர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.