சென்னை: தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் கூறியதாவது; தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2011 செப். 8 முதல் 2025 அக்.வரை 211 சட்ட மசோதாக்கள் பெறப்பட்டு 170 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 73 சட்ட மசோதாக்களுக்கு ஒரு வாரத்திலும், 61 சட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
27 மசோதாக்களுக்கு 3 மாதத்திலும், 9 சட்ட மசோதாவிற்கு 3 மாதத்திற்கு மேல் கால அவகாசத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 8 மசோதாக்கள் அக். இறுதி வாரத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டுள்ளது. 10 மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டு, அதற்கான விளக்கம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியபோது ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மசோதாவையும் மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து ஒப்புதல் தரப்படுகிறது என ஆளுநர் மளிகை விளக்கமளித்துள்ளது.

