மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தால் நிறுவப்பட்ட மாதிரி பதிவு அமைப்பின் தரவுகளின் படி பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை 1.3 என்ற மிக குறைவான கருவுறுதல் விகிதத்தை பெற்றுள்ளன. ஒன்றிய பிரதேசமான டெல்லி மட்டுமே தமிழ்நாட்டை விட குறைவாக 1.2 என்ற கருவுறுதல் விகிதத்தை பதிவு செய்துள்ளது. மொத்த கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக பெரும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.நாட்டின் மக்கள் தொகை நிலை தன்மையை அடைவதற்கான மாற்று விகிதம் 2.1 ஆகும். ஆனால் இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 1.9 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலை குறைந்தால் இந்தியாவில் வரும் காலத்தில் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட குறைந்து அதன் விளைவாக மக்கள் தொகை குறைய தொடங்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் அனைத்தும் குறைவான கருவுறுதல் விகிதத்தை பதிவு செய்துள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.5 ஆக உள்ளது. ஆனால் வடமாநிலங்கள் மாற்று விகிதத்தைவிட அதிகமாக கருவுறுதல் விகிதத்தை பதிவு செய்துள்ளன. பீகார் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக 2.8 ஆக உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2.6 ஆகவும், மத்திய பிரேதேசத்தில் 2.4 ஆகவும், சத்தீஸ்கரில் 2.2 ஆகவும் கருவுறுதல் விகிதம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஒரே அளவிலான கருவுறுதல் விகிதத்தை கொண்டுள்ளன. ஆனால் வடமாநிலங்களில் நகர்ப்புற, கிராமப்புறங்களில் பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் 1.8 ஆக உள்ள கருவுறுதல் விகிதம் கிராமப்புறங்களில் 2.6 ஆக உள்ளது. பீகாரில் நகர் புறங்களில் 2.2 ஆகவும், கிராமப்புறங்களில் 2.9 ஆகவும் உள்ளது இந்த தரவு தென்னிந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு பரவலாக அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளதை காட்டுகிறது.
ஒன்றிய அரசின் உந்துதலில் பெயரில் 1970 முதல் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் பெண் கல்வியில் முன்னேற்றம், நகர்மயமாதல் ஆகியவற்றின் பெயரால் இந்தியாவின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாநிலங்கள் கூடுதல் முனைப்புடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வட மாநிலங்கள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை சமீபத்திய தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.மக்கள் தொகையை குறைத்திருக்கும் தென் மாநிலங்கள் ஒன்றிய அரசு பின்பற்றும் கொள்கைகளால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு, நிதி ஒதுக்குதல் போன்றவை மக்கள் தொகை அடிப்படையிலேயே நடைபெறும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறையும் என தென்மாநில முதல்வர்கள் தெரிவித்து வரும் அச்சம் புறக்கணிக்கத்தக்கதல்ல . மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் தென் மாநிலங்கள் அதனால் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழலை தவிர்ப்பது ஒன்றிய அரசின் கடமை என்று சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தினார்.