சென்னை: தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் முருகர் கோவில் இருக்கும் மலையில் காலங்காலமாக தீபம் ஏற்றப்படும் அதே இடத்தில் கடந்த 3 ஆம் தேதியன்று தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் ‘தீபம் ஏற்றவிடவில்லை’ என்று சங்பரிவார் அமைப்புகள் கூறுவது பொய்.
மத்தியப்படையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என மாநிலத்தின் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குவதா?அமைதிமிகு தமிழ்நாட்டில் கலவர எண்ணத்தோடு ஒரு கும்பல் முயற்சிப்பதைத்தான் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என்பதை திரிப்பது சரியா? பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது என்பதே அரசின் நிலைப்பாடு என தெரிவித்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
அண்ணா அறிவாலயத்தில் (04-12-2025) இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திருப்பரங்குன்றம் கார்த்திகைத் தீப விவகாரம் குறித்து பேசி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு இருக்கும் இந்துத்துவ அமைப்புகள் எதை கையில் எடுப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகைத் தீபத் திருவிழா என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் திருவிழாவே தவிர இந்தியாவில் இருக்க இந்துக்களுடைய பண்டிகை அல்ல; அது தமிழர்களுடைய பண்டிகை. உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் கார்த்திகைத் திருவிழாவை கொண்டாடுவார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் கிடையாது.
ஆனால் இப்பொழுது திடீரென்று திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபத்தை ஒட்டி ஒரு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி அங்கே ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். 2014ஆம் ஆண்டு நீதியரசர்கள் பவானி சுப்பராயன், அதைப்போல நீதியரசர் கல்யாணசுந்தரம் 2014ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.
இன்று எந்த இடத்தில் கார்த்திகை தீபத்தை வழக்கப்படி ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ அதே இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று 2014லேயே தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அதை அறிந்து கொள்ளாதவர்கள், அதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள், ஏதோ புதிதாக ஒன்றை கண்டுபிடித்ததை போல நேற்று முன்தினம் நீதிமன்றத்தை அணுகி எங்களுக்கு கார்த்திகைத் தீப விளக்கேற்றுவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்டு ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த நீதிபதியும் தீர்ப்பை தந்திருக்கிறார்.
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், நீதிக்கு தலை வணங்குபவர்கள், எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சரை போல் சட்டத்தை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியாவிலேயே கிடையாது. அந்த அளவுக்கு சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவர் முதலமைச்சர்; சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்.
எனவே 2014-இல் இரண்டு நீதிபதிகள் ஃபுல் பெஞ்ச் அதாவது டிவிஷன் பெஞ்ச் கொடுத்திருக்கக்கூடியது அந்த தீர்ப்பு; அந்த தீர்ப்பை ‘Set aside’ பண்ணாமலோ அல்லது அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு இல்லாமலோ புதிதாக ஒரு தனி நீதிபதியை வைத்து ஒரு தீர்ப்பை வாங்கி கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டால் எப்படி நிறைவேற்ற அனுமதிக்க முடியும்? அப்படி அனுமதித்தால் தமிழ்நாடு அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே 2014 தீர்ப்பின் படி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்தார்கள்.
இன்று போராடுகிறவர்கள் 2014 நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிட்டு பேசுகிறார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள் அவர்கள்தான். இன்றைக்கு யார் யாரெல்லாம் அப்படி பேசுகிறார்களோ அவர்கள் மீது 2014 தீர்ப்பினுடைய அடிப்படையிலே எந்த வழக்கையும் தொடர்வதற்கு தமிழக அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் 2014 தீர்ப்பை படித்து பார்க்காமல் அப்படி ஒரு தீர்ப்பு இருக்கிறதே என்பதே கூட தெரியாமல் அல்லது நீதிமன்றத்தில் அதை மறைத்துவிட்டு புதிதாக ஒரு கதையை கட்டிவிட்டு போனால் அதை மக்கள் நம்புவார்களா? தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல. ஏமாளிகள் அல்ல.
அவர்களுக்கு வேண்டுமென்றால் அடிமை பழனிச்சாமி கிடைக்க முடியுமே தவிர வேறு எந்த அடிமைகளும் தமிழ்நாட்டில் கிடைக்க மாட்டார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் இவற்றுக்கு எடுத்துக்காட்டான பூமி இந்தியாவிலேயே தமிழ்நாடுதான்; அதை இன்றைக்கும் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தால் அதுக்கு மேல் என்ன இருக்கிறதோ அதை பற்றி சட்டத்துறையின் மூலமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி வந்து கண்டனம் தெரிவித்துள்ளார். என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையே கிடையாது. தமிழ்நாடு அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய வேலை.இந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்கொண்டு இதில் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர் இந்துத்துவாவினுடைய கைக்கூலிகளுக்கு அடிமையாக இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒன்று, இந்த தீர்ப்பை பொறுத்தவரை 2014ல் பெரிதும் போற்றிக் கொண்டுள்ளார்களே, அம்மா அம்மா என்று உச்சரிக்கிறார்களே அந்த அம்மையார் ஆட்சியில் இருந்தபோது வந்த தீர்ப்புதான், ஆக அந்த அம்மையாரை விட எடப்பாடி பெரிய அறிவாளி என்று அவருடைய கட்சிக்கார்கள் ஏற்றுக்கொண்டால் அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க தயாராக இல்லை. ஜெயலலிதா ஆட்சி இருக்கிற போதுதான் இந்த தீர்ப்பு வந்தது. அப்படி இந்த தீர்ப்பு சரியில்லை என்று சொன்னால் அந்த அம்மையாரே அப்பொழுது மேல் முறையீடு சென்றிருப்பார். அந்த அம்மையார் காலத்தில் போடப்பட்ட ஒரு தீர்ப்பு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்புக்கு தொடர்பாக இருப்பதினால்தான் இந்த நடவடிக்கை.
அதிமுக ஆட்சியில் இந்த இடத்தில் தான் இன்றைக்கு வழக்கப்படி ஏற்றப்படுகிற அதே இடத்தில் தான் ஏற்றப்பட வேண்டும் என்று அன்றைக்கு நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார்கள். இன்றைக்கு முழுவதும் தன்னை அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட காரணத்தால் தன்னை முழுவதுமாக மறந்துவிட்டு தான் முழு அடிமை என்பதை இந்த சம்பவத்தின் மூலம் அவர் நிரூபித்திருக் கின்றார். அண்ணா திமுக தொண்டர்கள் வெட்கப்பட வேண்டும்.
CISF குறித்த கேள்விக்கு “எங்களை பொறுத்தவரை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதை மீறி எந்த சக்தி வந்தாலும் அந்த சக்தியை எதிர்கொள்கிற சக்தி எங்களுக்கு இருக்கிறது.

