தாம்பரம் அருகே ஒரே கும்பல் கைவரிசை தபால் நிலையம், 3 வீடுகள் நகைகடைகளில் அடுத்தடுத்து கொள்ளை: ஒரே இரவில் அட்டகாசம்
தாம்பரம்: தாம்பரம் அருகே ஒரே கும்பல் அடுத்தடுத்து தபால் நிலையம், 3 வீடுகள், நகை கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கம் ரமணாநகர் 1வது பிரதான சாலையில் மாடம்பாக்கம் தபால் நிலையம் உள்ளது. நேற்று மாலை பணி முடிந்து வழக்கம்போல் தபால் நிலையத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
இன்று காலை பணிக்கு வந்தபோது, தபால் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சிடைந்தனர். இதுகுறித்து போஸ்ட் மாஸ்டர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அலுவலக பயன்பாட்டிற்கு வைத்திருந்த 8 செல்போன்கள் திருடு போனதும், பணம் வைத்துள்ள லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றதும் தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு ரேகைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே தொடர்ந்து பெரியார்நகர் பிரதான சாலைக்கு சென்ற கொள்ளையர்கள், அங்குள்ள தங்க நகை அடகுகடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். முடியாததால் அருகில் உள்ள லோகேஷ் என்ற மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் நுழைந்து 28 ஆயிரம் ரூபாய், 2 செல்போன்களை திருடியுள்ளனர். மேலும் அதே பகுதியில் ராஜூ என்பவர் வீட்டில் எந்த பொருட்களும் கிடைக்காததால் துணிகளை கலைத்து போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர், சோழன் நகர் பகுதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த நாகராஜனின் காரை திருடி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தாழம்பூர் காவல்நிலைய எல்லை பகுதியில் உள்ள பொன்மாரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியரை தாக்கி செல்போன், 14,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து அந்தந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தபால் நிலையம், 3 வீடுகள், பெட்ரோல் பங்க், நகைக்கடைகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

