சென்னை: தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே சுமார் 60 கிலோ மீட்டர் நீளம் உள்ள வழித்தடத்தில் தினசரி 4 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து-தாம்பரம் வரையில் 4 வழித்தடங்கள் ரயில்வே தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் 23 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும், புறநகர் மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய வழித்தடத்தில் 3 வழித்தடங்கள் மட்டும் இருப்பதன் காரணமாக பெரும்பாலான புறநகர் மின்சார ரயில் சேவைகள் செங்கல்பட்டு வரை இயக்கமுடியாத நிலை தொடர்கிறது.
இந்த நிலையில் தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டருக்கு 4வது வழித்தடம் அமைப்பதற்கு இட ஆய்வு இறுதி செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரூ.713.4 கோடி மதிப்பீட்டில் 4வது வழித்தடம் அமைப்பதற்கு ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் அளிப்பதற்கு உரிமை கோரப்பட்டுள்ளது. வாரியம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை விரைந்து துவங்கிட ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.
4வது வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னை கடற்கரையிலிருந்து-செங்கல்பட்டு வரைக்கும் 4 பிரதான வழித்தடங்கள் இருப்பதன் காரணமாக வரும் நாட்களில் கூடுதலான புறநகர் மின்சார ரயில் சேவைகளையும், விரைவு ரயில் சேவைகளையும் செங்கல்பட்டு வரை இயக்க முடியும் என்பது ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டருக்கு 4வது ரயில்பாதை அமைக்கும் பட்சத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் எனவும், 4வது வழித்தடம் என்பது ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைப்பதற்கு பரிந்துரைக்கபட்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .