காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பொதுமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு மாகாணம் முழுவதும் இணையச் சேவைக்குத் தடை விதித்து அதன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாதா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் வடக்கே உள்ள பால்க் மாகாணத்தில் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
கம்பிவட மற்றும் ஒளியிழை வழியே வழங்கப்படும் இணையச் சேவைகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என்பதால், மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒழுக்கக்கேடான விஷயங்களைப் பார்ப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செல்போன் இணையச் சேவைக்குத் தடை இல்லை என்றாலும், அதுவேகம் குறைவாகவும், அதிக செலவு பிடிக்கக்கூடியதாகவும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்தத் தடையால் மசார்-இ-ஷெரீப் போன்ற முக்கிய நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்யும் தொழில் முனைவோர் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதாக அஞ்சுகின்றனர். தலிபான்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.