Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திறமை இருந்தால் சிகரம் தொடலாம்!

வாழ்க்கை என்னும் வேக ஓட்டத்தில் அதற்கேற்ப ஓடினால் நாம் எதை விரும்புகிறோமோ அதனை அடையலாம். முயற்சியுடன் கூடிய நம்பிக்கை உள்ள ஒருவன் தன் காரியத்திலும், செயலிலும் வாழ்க்கையிலும்நிச்சயமாக வெற்றி பெறமுடியும்.தனது நகைச்சுவை திரைப்படங்கள் மூலம் உலகையே ஆட்டிப்படைத்த சார்லி சாப்ளின் பற்றி நாம் அறிவோம். உலக அரங்கில் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவைப் புரட்சி ஏற்படுத்தியவர் எனவும் சொல்லலாம். அவர் ஒரு முறை தான் தயாரிக்கும் படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடத்திக் கொண்டிருந்தார்.ஒரு இளைஞர் அவரிடம் நடிப்பதற்கான வாய்ப்பு கேட்டு வந்தார்.

சார்லி சாப்ளின் அந்த இளைஞரிடம் உனது திறமையை நிரூபிக்கக் கூடிய சான்று ஏதாவது இருக்கின்றதா? என்று கேட்டார். ‘இருக்கிறது’ என்றார் அந்த இளைஞர், உள்ளூர் பிரமுகர்கள் சிலரிடம் வாங்கிவந்திருந்த நற்சான்று கடிதங்களை அவரிடம் காண்பித்தார். சார்லி சாப்ளின் அவற்றை வாங்கி பார்த்துவிட்டு இவை எல்லாம் போதாது என்று சொல்லி அந்த இளைஞரை திருப்பி அனுப்பிவிட்டார். இரண்டு நாட்கள் சென்றன, அந்த இளைஞர் மறுபடியும் சார்லி சாப்ளினை காண வந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர்கள் சிலரிடம் நற்சான்றுக் கடிதங்கள் வாங்கி வந்திருக்கின்றேன் என்று சொல்லி அவற்றை சார்லி சாப்ளினிடம் கொடுத்தார். அந்த கடிதங்களை பார்வையிட்ட சார்லி சாப்ளின் இவற்றாலும் பயனேதும் இல்லை என்று சொன்னார். இளைஞர் அன்று திரும்பி போனாலும் மறுபடியும் சார்லி சாப்ளினைத் தேடி வந்து கொண்டே இருந்தார். தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் என்று மாறி மாறி நற்சான்றுக் கடிதங்களை வாங்கி வந்த வண்ணம் இருந்தார். மிகவும் சோர்வும், எரிச்சலும் அடைந்தார். அவர் சார்லி சாப்ளினிடம் வேறு யாரிடம் நான் என் திறமை குறித்துச் சான்றுகள் வாங்கி வர வேண்டும். அதைப்பற்றி சற்று தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்டார்.

சார்லி சாப்ளின் புன்னகையுடன் இளைஞரே, உமக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர். நடிப்புத்திறமை உமக்கு இருப்பதாக கூறுகின்றீர்.உமக்கு நடிக்கத்தெரியும் என்று என்னிடம் நிரூபித்துக் காண்பிப்பது ஒன்றுதான் உண்மையான சான்று.இத்தனைபேருடைய சான்றுக் கடிதங்கள் மூலம் உங்கள் நடிப்பாற்றலை நான் எப்படி விளங்கிக் கொள்ள முடியும் என்றார். இதை நீங்கள் என்னிடம் முன்பே சொல்லி இருக்கலாமே என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார்அந்த இளைஞர்.‘‘நீங்கள் உண்மையில் நல்ல நடிகராக இருந்தால், இத்தனை சான்றுக்கடிதங்களை நீங்கள் தேடி இருக்க மாட்டீர்கள்,நேரடியாக என் முன்பு வந்து நடித்துக் காண்பித்து உங்கள் நடிப்பாற்றலை நிரூபித்துக்காட்ட முயற்சி செய்திருப்பீர்கள் என்றார் புன்னகை மாறாமல், பலரிடம் சென்று, முயற்சிகள் பல செய்து நற்சான்றிதழை வாங்கி வந்த இளைஞருக்கு,தன் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதையே, சார்லி சாப்ளின் அழகாக சுட்டிக்காட்டினார். இதை உணர்ந்த இளைஞன் தன் தவறுக்கு வருந்தினார்.

நீங்கள் எவ்வளவு அறிவுடையவராக இருந்தாலும் அந்த அறிவுத்திறனை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் அறிவு மேன்மேலும் வலுப்படும். எப்பொழுதுமே உங்கள் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கூர்மைப்படுத்திக் கொண்டே இருங்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் துறை சார்ந்த தகவல்களை ஆர்வத்துடன் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயலுங்கள். அடுத்த கட்டம், அடுத்த நிலை என்று ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அத்துறை சார்ந்தவற்றை அறிந்து தெளிவடையுங்கள். எப்போதும் நீங்கள் தெளிவான சிந்தனையுடனும், எண்ணங்களுடனும் சுயமான அறிவுடனும் செயல்பட்டால் அந்த அறிவே சக்தியாக வெளிப்படும். அந்த சக்தியே மேன்மேலும் உங்களை உயர்த்தும். உங்கள் எதிர்மறை எண்ணங்களை அது மாற்றி விடும்.அந்த சக்தி புதிய வாய்ப்புகளை கைப்பற்ற வைத்து உங்களை முன்னேற்றப் பாதையில் செலுத்தி வெற்றிகளைக் காண வைக்கும். அப்படி தனது ஒப்பற்ற திறமையின் மூலமாக உலகில் மிகப்பெரிய பதவியை பெற்ற ஒருவரை நீங்கள்

ண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகப்புகழ் பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ஷெனேல் இந்தியாவைச் சேர்ந்த லீனா நாயர் என்பவரை அதன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக (CEO) நியமித்து உள்ளது. இது உலக அளவில் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.மகாராஷ்டிரா மாநிலம் கோலாப் பூரில் பிறந்தவர் லீனா நாயர். கோலாப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த லீனா, சாங்கலியில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலைப்பட்டம் பெற்றார். அதன் பின்னர், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தன்னுடைய எம்.பி.ஏ. படிப்பை முடித்தார். இங்கு, சிறப்பான செயல்பாட்டிற்காக லீனாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

படிப்பை முடித்த கையோடு 1992ம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவரில் ட்ரெயினியாக (Trainee) வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட லீனா கொல்கத்தா, சென்னை அம்பத்தூர் மற்றும் மகாராஷ்டிராவில் தலோஜா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் தொழிற்சாலைகளில் பணியாற்றினார்.அதன் பின்னர், 2016ம் ஆண்டுஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி என்ற உயரிய பொறுப்புக்குச் சென்றார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் 1,50,000 பேருக்கு பொறுப்பாளராக மாறினார்.

இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையும், ஆசியாவைச் சேர்ந்த முதல்நபர் என்ற பெருமையும் லீனா பெற்றுள்ளார். மிக இளம் வயதிலேயே இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவரே. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் இவர் தலைமைப்பொறுப்பேற்ற பிறகு 2010ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமை பதவிகளில் ஆண்களுக்கு சமமாக பெண்களை நியமிக்க முக்கியக் காரணமாக செயல்பட்டார்.லீனாவைப் பற்றி அவர் முன்பு பணியாற்றிய யூனிலீவரின் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் ஜோப் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்காக லீனாவின் சிறந்த பங்களிப்பிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யூனிலீவரில் பணியாற்றிய காலம் முழுவதும் லீனா, பிற பணியாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தார். அவர் தலைமை மனிதவள அதிகாரி மட்டும் இல்லாமல், எங்கள் பன்முகத்தன்மை, தலைமைத்துவ வளர்ச்சிக்கான மாற்றம் மற்றும் எங்கள் எதிர்கால வேலைக்கான தயார்நிலை ஆகியவற்றில் ஒரு உந்து சக்தியாக இருந்தார். இந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது எனப் பாராட்டியுள்ளார்.

தற்போது ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ள லீனா நாயர், தற்போது பிரபல பிரெஞ்சு நிறுவனமான சேனல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் ஷெனேல் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதில் பணிவும் பெருமையும் அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார் லீனா நாயர்.1910ம் ஆண்டு ஆடை வடிமைப்பில் புகழ் பெற்ற கேப்ரியேல் கொக்கோ ஷெனேல் என்பவர், பிரான்சில் ஷெனேல் நிறுவனத்தை தொடங்கினார். ஆடம்பர ஆடைகள், விலை உயர்ந்த கைப்பைகளை தயாரிக்கும் நிறுவனமான ஷெனேல் ஆடை அலங்காரத் துறையைச் சாராத உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் சர்க்கரையை அள்ளித் தரையில் வீசினால் எவ்வாறு எறும்புகள் அதனை தேடி ஓடி வருகின்றதோ, அதுபோல திறமைகளை வளர்த்துக் கொண்டால், சிறப்பான வேலை வாய்ப்புகள் தேடி வரும். எதையும் முனைந்து செய்யும் பழக்கத்தை இளமைக் காலம் முதல் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் முனை இருக்கின்ற ஊசி தான் தைக்கும், அதுபோல முனைப்பு இருக்கின்ற முயற்சிதான் ஜெயிக்கும்.இவரைப் போல வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் திறனை வளர்த்துக் கொள்பவர்களுக்கு, திரும்பும் திசையெங்கும சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். காரணங்கள் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கரைக்காமல் காரியத்தில் இறங்கி நேரத்தை உழைப்பில் முதலீடு செய்தால் லீனா நாயரை போல நீங்களும் சிகரம் தொடலாம்.