ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்தியா வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக வருகை தந்தார். அவரது வருகையையொட்டி தாஜ்மகாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
உள்ளூர் போலீசார் மட்டுமின்றி அமெரிக்க பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தாஜ்மகால் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் சிஐஎஸ்எப் வீரர்கள் தாஜ்மகாலின் உள் பாதுகாப்பை எடுத்துக்கொண்டனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு வந்த டிரம்ப் ஜூனியர் சுமார் ஒரு மணி நேரம் தாஜ்மகாலை பார்வையிட்டார். டயானா பெஞ்ச் உள்ளிட்டவற்றில் அமர்ந்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் சுற்றுலா வழிகாட்டி நிதின் சிங் உடன் இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் வருகையின்போதும் இதே வழிகாட்டி தான் தாஜ்மகாலை சுற்றி காண்பித்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.


