புதுடெல்லி: தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழில்நுட்ப, கலாச்சார உறவுகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வான் யீ நேற்று முன்தினம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அப்போது ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப்பேசினார்.
அப்போது தைவான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது. தைவான் பிரச்னை குறித்து ஜெய்சங்கர் எந்த தௌிவான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் வான் யீ உடனான சந்திப்பின்போது, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தைவானை சீனாவின் ஒரு பகுதியாக கருதுகிறார் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியதாக சீன ஊடகங்கள் வெளியிட்டதை தொடர்ந்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தைவான் குறித்த எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் பிற பகுதிகளை போலவே இந்தியாவும் தைவானுடன் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார உறவுகளில் கவனம் செலுத்தும் உறவை கொண்டுள்ளது என்பது வலியுறுத்தப்பட்டது. அதை தொடர நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளன.