திண்டிவனம்: வாழப்பாடி தாக்குதல் சம்பவத்துக்குபின் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், அன்புமணியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கார் மீது வாழப்பாடியில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தைலாபுரம் வந்த அருள் எம்எல்ஏ, பாமக நிறுவனர் ராமதாசை ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த அருள் எம்எல்ஏ அளித்த பேட்டி: வாழப்பாடி அருகே துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வந்தபோது என் கார் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அன்புமணி தூண்டுதலினால் இந்த தாக்குதல் நடைபெற்றதால் முதல் குற்றாவாளியாக சேர்த்து அவரை கைது செய்ய வேண்டும். அன்புமணிக்கு, என்னை கொல்லணும் என்பதுதான் ஆசை. அதனால் தான் பசங்களை ஏவிவிட்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அன்புமணி குறித்து எல்லா தகவல்களையும் தெரிவிப்பேன் என கூறினீர்களே என்று கேட்டதற்கு, என்னையே கொலை செய்ய வரும்போது இறப்பதற்கு முன் எல்லாத்தையும் எழுதி வைச்சிட்டு சாகணும். அதனால்தான் அப்படி கூறியதாக தெரிவித்தார்.
* அருள் எம்எல்ஏவை கைது செய்யாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு சதாசிவம் எம்எல்ஏ பேட்டி
அன்புமணி தரப்பை சேர்ந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று எஸ்பி அலுவலகத்தில் அருள் எம்எல்ஏ ஆதரவார்களை கைது செய்ய மீண்டும் முறையிட்டனர். அப்போது சதாசிவம் எம்எல்ஏ கூறியதாவது: மோதல் தொடர்பாக அருள் எம்எல்ஏ தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு அளித்தோம். இதில் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை யாரும் கைது செய்யப்படவில்லை. மறுபடியும் நாங்கள் நியாயம் கேட்க வந்துள்ளோம். ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று கேட்டோம். இன்று (நேற்று) மாலைக்குள் கைது செய்வதாக கூறியுள்ளனர். இது வெறும் தாக்குதல் மட்டுமல்ல. கொலை முயற்சியாகும். இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, வரும் 10ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இவ்வாறு சதாசிவம் எம்எல்ஏ கூறினார்.

