தைலாபுரத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட லண்டன் ஒட்டு கேட்கும் கருவியை போலீசில் ஒப்படைத்தார் ராமதாஸ்: யார் யாருக்கு தொடர்பு என தீவிர ஆய்வு
திண்டிவனம்: தைலாபுரத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட லண்டன் ஒட்டு கேட்கும் கருவியை போலீசில் ராமதாஸ் நேற்று ஒப்படைத்தார். முழுமையான ஆய்வுக்கு பிறகே யார் யாருக்கு தொடர்பு என தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இருவரும் நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் என தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் விருத்தாசலத்தில் நடந்த பொதுக்குழுவுக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், ‘தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கைக்கு அடியில் விலை உயர்ந்த அதிநவீன ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டது இருந்தது. இது லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டது’ என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தனியார் துப்புறியும் ஏஜென்சியை சேர்ந்த 5 பேர், தைலாபுரம் தோட்டத்தின் வீட்டில் ஆய்வு செய்து ஒட்டு கேட்கும் கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது தொடர்பாக பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஏடிஎஸ்பி விழுப்பபுரம் தினகரனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி மற்றும் சைபர் கிரைம் போலீசார் ராமதாஸ் வீட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்தினர்.
அங்குள்ள ஊழியர்கள், உதவியாளர்களிடமும் யார் யார் வந்து சென்றார்கள் என்பது குறித்து தகவல் கேட்கப்பட்டது. விசாரணையில் ஒட்டு கேட்பு கருவியை ஒப்படைக்கும்படி போலீசார் கேட்டனர். ஆனால், ராமதாஸ் ஒப்படைக்க மறுத்துவிட்டார். சென்னையில் தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பே ஒப்படைப்பேன் என்று ராமதாஸ் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் ராமதாசிடம் ஒட்டு கேட்பு கருவியை திரும்ப ஒப்படைத்த நிலையில், நேற்று பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஒட்டு கேட்பு கருவியை கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்த பின் இதில் யார் யாருக்கு தொடர்பு? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
* அமைப்பு செயலாளர், தலைவர் மாற்றம்
அன்புமணி உடனான மோதலை அடுத்து அவரது ஆதரவாளர்களான பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், 81 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வன்னியர் சங்க நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து உள்ளார்.
இந்நிலையில், பாமகவின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த சண்முகம், தலைவராக இருந்த திருமாவளவன் ஆகியோரை நீக்கி, புதிய அமைப்பு செயலாளராக சுரேஷ்குமார், தலைவராக காளிதாஸ் ஆகியோரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நகர, ஒன்றிய, பேரூர் பகுதிக்கு 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.