Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது யார் என 2, 3 நாளில் அம்பலத்துக்கு வரும்; ராமதாஸ் பரபரப்பு பேட்டி

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார்? என்று 2, 3 நாட்களில் அம்பலத்துக்கு வரும் என தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:

தமிழ்நாடு முழுவதும் நீர்திறப்புக்கான ஷெட்டர்கள், கருவிகள், ரெகுலேட்டர்களை வடகிழக்கு பருவ மழைக்குமுன்பு மறுசீரமைப்பு செய்து விட்டால் பெரிய இழப்பில் இருந்து தப்பிக்கலாம். மொத்தம் 36 மாவட்டங்களில் 149 பாசன கட்டமைப்புகளில் மறுசீரமைப்பு, கட்டுமான பணிகளை ஒன்றிணைக்க நீர்வளத்துறை கேட்கும், 1,000 கோடி ரூபாயை தாமதமின்றி நிதித்துறை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை பாமக வலியுறுத்துகிறது.

சென்னையில் விம்கோ நகரில் ரயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது புறநகர் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கபட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலத்தவரை பணியில் நியமித்துள்ளதால் விபத்து மற்றும் காலதாமதம் பரிசாக கிடைக்கிறது.

இதுபோன்ற சிறிய விஷயங்களிலாவது ஒன்றிய அரசு கவனம் செலுத்தி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ‘உங்கள் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு கொடுத்திருக்கிறீர்கள். விசாரணை எந்த நிலையில் இருக்கிறது?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை யார் வைத்தார்கள், யார் சார்ஜ் போட்டார்கள் என்பதெல்லாம் விசாரணையில் இருக்கிறது.

இன்னும் 2, 3 நாட்களில் அது அம்பலத்துக்கு வரும், வெளியேவரும்” என்று ராமதாஸ் பதில் அளித்தார். ‘உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?’ என்றதற்கு, ‘‘இருக்கு உங்கள் மீதும் கூட இருக்கிறது. காவல்துறை முதல்கட்ட விசாரணையை தொடங்கி விட்டனர். 8 பேர் முதல்கட்ட விசாரணையில் உள்ளனர்” என்று கூறினார்.

* ராமதாஸ், ஊழியர்களிடம் தனிப்படை விசாரணை

ஒட்டு கேட்பு கருவி பற்றிய புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் உட்பட 8 பேர் கொண்ட தனிப்படையினர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு நேற்று காலை சென்றனர். அங்கிருந்த ராமதாஸ் மற்றும் அவரது இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் 2 மணி நேரம் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். ஒட்டுகேட்பு கருவி குறித்து எப்போது சந்தேகம் வந்தது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஆய்வு செய்த துப்பறியும் நிறுவனம் எது? என்பது போன்ற விவரங்கள் ராமதாசிடம் கேட்கப்பட்டது.

மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் கடந்த 2 மாதமாக பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார், முதல்கட்ட விசாரணையில் சில துப்புகள் கிடைத்துள்ளதால், அடுத்தகட்டமாக தனியார் துப்பறியும் ஏஜென்சியிடமும், சில சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக செய்தியாளர்களிடமும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தவர் யார் என்பதை கண்டுபிடித்து விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

* மாவட்ட அளவில்தான் பொதுக்குழு

பாமக பொதுக்குழுவை எப்போது கூட்டப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, பாமக பொதுக்குழுவை கூட்டவில்லை. மாவட்ட அளவில் கூட்டி வருகிறோம் என்றார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 49 கட்சிகள் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே? என்றதற்கு, 49 கட்சிகள் இருக்குமா, பார்ப்போம். இன்னும் மாதங்கள் இருக்கிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். அந்த நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என உங்கள் யோசனையையும் கேட்கிறேன் என்றார்.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு வரவேற்பு

ராமதாஸ் கூறுகையில், தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறப்படுவது செய்திகள் வாயிலாக அறிந்தேன். நல்ல விஷயம்தான். இதை 6 மாதங்களுக்கு முன்பே நாம் தொடங்கி இருக்கலாம். முதலமைச்சர் முகாம் அமைத்து, அதில் அதிகாரிகளை உட்கார வைத்து மனுவை வாங்கச் சொன்னால் எந்த அதிகாரியாவது மனுவை வாங்கி பரிசீலிக்காமல் போவாரா? முதலமைச்சர் கவனத்துக்கு சென்றாலே தொலைந்தோம் என்ற பயம் அதிகாரிகளுக்கு வர வேண்டும் என்றார்.

* பிரசாரம் எப்போது?

‘‘அதிமுக, திமுக எல்லாம் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். தேதிமுகவும் பிரசாரத்தை தொடங்கி விட்டது. பாமக எப்போது பிரசாரத்தை தொடங்கும்?” என்ற கேள்விக்கு, ‘‘நாங்கள் பிரசாரம் பண்ணவில்லை என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ராமதாஸ் ரோடு ஷோ, வந்துட்டார் என்று ஊர்ஊராக போனால்தான் ஆரம்பித்து விட்டதாக அர்த்தமா என்ன?. நாங்கள் களத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்கிறேன். மாவட்டங்களில் எல்லோரிடமும் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமென சொல்லி இருக்கிறோம்\\” என்று ராமதாஸ் பதில் அளித்தார்.

* ஆளுநர் வேடிக்கை

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருக்குறளிலே இல்லாத ஒரு குறளை அச்சிட்டு ஒரு ஷீல்டு கொடுக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, ‘‘புதிய குறளாக உருவாக்கி உள்ளார்களா, 1,330 குறளில் 1331 குறளாக சேர்த்துள்ளார்களா?. நல்ல வேடிக்கைதான்” என்று ராமதாஸ் பதிலளித்தார்.

* பூம்புகார் மாநாட்டுக்கு அன்புமணி வரலாம் வராமலும் போகலாம்

நீங்கள் நடத்தும் பூம்புகார் மாநாட்டுக்கு நோட்டீசில் அன்புமணி பெயர் இடம்பெறவில்லை, அவர் வருவாரா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘கட்சி விளம்பரத்தில் வரும். வரலாம். அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம், வராமல் போகலாம்” என்று ராமதாஸ் பதில் அளித்தார்.

‘‘20ம்தேதி விழுப்புரத்தில் அன்புமணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர்களா உங்கள் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா?” என்ற கேள்விக்கு, ‘‘அன்று வேறு ஏதாவது நிகழ்ச்சி இருக்கிறதா என எனக்கு தெரியல. கலந்து கொள்ளலாம், கலந்து கொள்ளாமல் போகலாம். அதனால, போக போகத் தெரியும்...” என பாட்டு பாடி பதிலளித்தார்.

* ‘அன்புமணியை புறக்கணிக்கலை பிரிண்டிங் மிஸ்டேக்’: அருள் எம்எல்ஏ

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், ஆக.10ம் தேதி வன்னியர் மகளிர் மாநாடு சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பு.தா.அருள்மொழி, தீரன், சேலம் எம்எல்ஏ அருள், அன்பழகன், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் எம்எல்ஏ அருள் கூறுகையில், மகளிர் மாநாடு துண்டறிக்கையில் அன்புமணி படத்தை புறக்கணிக்கவில்லை.

அது பிரிண்டிங் மிஸ்டேக். சேலம் மாவட்டத்தில் பாமக அடித்த மாநாடு துண்டறிக்கையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இருவரும் ஒன்றிணையும் காலத்திற்கு தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார். இதனிடையே இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.