Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல் டி.20போட்டியில் இந்தியா அபார வெற்றி; ஹர்திக் பேட்டிங் பிரமிக்கும் வகையில் இருந்தது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

கட்டாக்: இந்தியா -தென்ஆப்ரிக்கா இடையே 5 போட்டி கொண்ட டி.20தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சைதேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா நாட் அவுட்டாக 28 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 59, திலக் வர்மா, 26, அக்சர்பட்டேல் 23 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 12.3ஓவரில் 74 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 101 ரன் வித்தியாசத்தில்இந்தியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெவால்ட் பிரெவிஸ்22 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல்தலா 2, ஹர்திக் பாண்டியா, ஷிவம்துபே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வதா? இல்லை பந்து வீசுவதா என்ற குழப்பம் இருந்தது. எனினும் முதலில் பேட்டிங் செய்தது மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் 48 ரன்களுக்கு 3விக்கெட் இழந்த பிறகு, 175 ரன்எடுத்தது என்பது உண்மையிலே சிறந்த விஷயம். 160 ரன் எடுத்தாலே போதும் என்று நினைத்தோம். ஆனால் 175 ரன் உண்மையிலேயே நம்ப முடியவில்லை. அணியில் 7,8 பேட்டர் உள்ளனர். அணியில் அனைவரும் பயமின்றி விளையாட வேண்டும். பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். ஹர்திக் ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. பந்துவீச்சில் பவர் பிளேவில் அவரை நான் பயன்படுத்தாமல் இருந்ததற்கு காரணம், அவர் இப்போதுதான் காயத்திலிருந்து வந்திருக்கிறார். இன்று எல்லா வீரர்களும் தங்கள் பணியை சிறப்பாக செ்யதனர். ஒரு கேப்டனாக இதுதான் எனக்கு வேண்டும், என்றார். 2வது டி.20 போட்டி புதிய சண்டிகரில் நாளை நடக்கிறது.

பாசிட்டிவாக அடுத்த போட்டியை அணுகுவோம்!

தென்ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 175 ரன் எட்டக்கூடிய இலக்குதான். சேஸ் செய்திருக்க முடியும் என்று நம்பினோம். பந்துவீச்சில் இன்னும் ஒரு 10-15 ரன் குறைத்திருக்கலாம் என்று யோசிக்கலாம். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்த பிறகு நிலைத்து நின்று, ஆட்டத்தின் போக்கை மாற்றத் தவறிவிட்டோம். அதுதான் எங்களைப் பாதித்தது. இதைப் பற்றி அதிகம் ஆராய்ந்து குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. இந்தத் தோல்வியை இத்தோடு மறந்துவிட்டு, பாசிட்டிவாக அடுத்த போட்டியை அணுகுவோம்”, என்றார்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணிக்கு முடிந்ததை செய்வேன்;

ஆட்டநாயகன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ”பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அந்த நேரத்தில் கொஞ்சம் தைரியமாக ஆட வேண்டியிருந்தது. பந்தை உடைக்கும் அளவுக்கு ஓங்கி அடிப்பதை விட சரியான டைமிங்கில் அடிப்பதில் கவனம் செலுத்தினேன். நான் பேட்டிங் செய்த விதம் மிகுந்த திருப்தியை அளித்தது. கடந்த 6-7 மாதம் ஃபிட்னஸ் ரீதியாக எனக்குச் சிறப்பாக அமைந்தது. இதற்காக நான் பட்ட கஷ்டங்களை பெரிதாகச் சொல்ல விரும்பவில்லை. இன்று இங்கு வந்து ஆடி, அதற்கான பலன் கிடைக்கும்போது மனநிறைவாக இருக்கிறது. கிரிக்கெட் வீரராக, அணியில் எனக்கு என்ன வேலை என்பது குறித்து நான் ஒருபோதும் கவலைபட்டதில்லை. எனக்கு என்ன வேண்டும் என்பது முக்கியமல்ல; இந்திய அணிக்கு என்ன தேவை என்பதுதான் முக்கியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னால் முடிந்ததைச் செய்வேன், என்றார்.

பும்.பும்..பும்ராவின் சாதனை...

* டி.20ல் 100 விக்கெட் மைல்கல்லை எட்டிய 2வது இந்திய வீரர் பும்ரா. அர்ஷ்தீப் சிங் 107 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.

* டெஸ்ட், ஒன்டே, டி.20 என 2 வித கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டிற்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். சர்வதேச அளவில் மலிங்கா, ஷகிப் அல் ஹசன், டிம் சவுதி, ஷாஹீன் ஷா அப்ரிடி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

* தென்ஆப்ரிக்கா நேற்று 74 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது தான் டி.20ல் அவர்களின்குறைந்த ஸ்கோர் ஆகும். டி.20ல் அவர்களின் 4 குறைந்த ஸ்கோரில் 3 இந்தியாவுக்கு எதிராகத்தான்.

* டி.20ல் இந்தியா 9வது முறையாக 100 பிளஸ்ரன்னுக்குமேல் வென்றுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் எந்த அணியும் 4க்கு மேல் இதுபோல் வென்றதில்லை.

* தெ.ஆ. டி.20ல் 100 ரன் வித்தியாசத்திற்கு மேல் தோற்பது இது 6வது முறை. இதில் 3 இந்தியாவுக்குஎதிராகத்தான். ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில் வேறு எந்த அணியும் இதுபோன்று 3க்கு மேல் தோற்றதில்லை.

* டி.20ல் டேவிட் மில்லர் 8வது முறையாக பாண்டியா பந்தில்அவுட்ஆகி உள்ளார். வேறு எந்த பவுலரிடமும் 4 முறைக்குமேல் அவர் அவுட்ஆனதில்லை.