Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4வது டி20 போட்டியில் இன்று எழுச்சி பெற்ற இந்தியா மலர்ச்சி இழந்த ஆஸி

கோல்ட் கோஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது.  ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஒரு போட்டி மழையால் டிரா ஆனது. மற்ற இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் உள்ள நிலையில், இன்று கோல்ட் கோஸ்ட் நகரில் 4வது டி20 போட்டி நடக்கிறது.

3வது போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சாதுரியமாக அடக்கி எளிய வெற்றி பெற்று அசத்தியதால் புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ஆஸி அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் இடம்பெறாதது, அந்த அணிக்கு பலவீனம். தவிர, ஆஸி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டும் அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் இன்றைய போட்டியில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுப்மன் கில், கடந்த 6 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இன்று அதற்கு ஒரு முடிவு கட்டுவார் என எதிர்பார்க்கலாம். மாறாக, துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்து கலக்கி வருகிறார். கேப்டன் சூர்யகுமார், முதல் போட்டியிலும் 3வது போட்டியிலும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். இன்றும் தனது அதிரடியை அவர் தொடர முனைப்பு காட்டுவார். இன்றைய போட்டியில் மித வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளது நல்ல பலனை அளிக்கும். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் சற்று வலுவிழந்து காணப்படுகிறது.