Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2வது டி20யில் 51 ரன் வித்தியாசத்தில் தோல்வி; அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம்: இந்திய கேப்டன் சூர்யகுமார் பேட்டி

நியூசண்டிகர்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் 2வது போட்டி நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 90, டோனோவன் ஃபெரீரா 30, கேப்டன் மார்க்ரம் 29 ரன் அடித்தனர்.பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் டக்அவுட் ஆக அபிஷேக் சர்மா 17, அக்சர்பட்டேல் 21, கேப்டன் சூர்யகுமார் 5, ஹர்திக்பாண்டியா 20, ஜிதேஷ் சர்மா 27 ரன் எடுத்தனர். அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன் அடித்தார். 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இதனால் 51 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட் வீழ்த்தினார். டிகாக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குவித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: பவுலிங்கில் நாங்கள் செயல்பட்ட விதம் போதாது. அதே சமயத்தில் எதிரணியினர் இந்த பிட்ச்சில் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தனர். இங்கு கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். பனிப்பொழிவு இருந்ததால் எங்கள் திட்டம் வேலை செய்யவில்லை. எங்களிடம் 2வது திட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதற்குள் செல்லவில்லை. பரவாயில்லை, அவர்கள் பந்து வீசியதில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

நானும் கில்லும் நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். ஏனென்றால் எப்பொழுதும் அபிஷேக் ஷர்மாவை நம்பிக்கொண்டு இருக்க முடியாது. நான் கில் மற்றும் சில பேட்ஸ்மேன்கள் இந்த பொறுப்பை எடுத்திருக்க வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம். அக்சர் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் சிறப்பாக பேட்டிங் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவருக்கு முன்கூட்டியே இறங்க ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவர் அதே வழியில் பேட்டிங் செய்வார் என்று நினைத்தோம். ஆனால் அது இன்று பலன் அளிக்கவில்லை. அடுத்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 1-1 என தொடர் சமனில் இருக்கிறது. 3வது போட்டி ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் நடக்கிறது.

உலக கோப்பைக்கு தயாராவது தான் முதல் நோக்கம்:

தென்ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், ``முதல் போட்டியில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பினர். இன்று பந்துவீச்சு இன்னும் சிறப்பாக இருந்தது. எங்கள் பந்துவீச்சு யூனிட் சரியான திசையில் பயணிக்கிறது. ஃபீல்டிங்கும் அற்புதமாக உள்ளது. இது ஒரு அருமையான கிரிக்கெட் மைதானம். உலகக்கோப்பைக்கு தயாராவதே எங்களின் முதல் நோக்கம். அதனால்தான் சிலருக்கு ஓய்வு கொடுத்து, சிலரை சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம்’’ என்றார்.

பேட்டிங்கில் சிறிய தொழில்நுட்ப மாற்றத்தை செய்தேன்!

ஆட்டநாயகன் டிகாக் கூறுகையில், ``அர்ஷ்தீப் சிங் என்னை நிறைய முறை அவுட் செய்திருக்கிறார் என்பது தெரியும். ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாகத்தான் அவுட் ஆகிறேன். எனவே, இந்த முறை பேட்டிங்கில் ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றத்தை செய்தேன். அதுகுறித்து விழிப்புடன் இருந்தேன். அது இயல்பாகவே கைகொடுத்தது. நாங்கள் பேட்டிங் செய்தபோது முக்கியமான விஷயம் பந்து ஈரமாக இல்லை. பந்து காய்ந்துதான் இருந்தது. ஆனால் இந்தியா பேட்டிங் செய்தபோது பிட்ச் வேகம் எடுத்தது. பந்து வேகமாக சென்றது. இதுதான் 2 இன்னிங்ஸுக்கும் உள்ள வித்தியாசம்’’ என்று விளக்கினார்.