லக்னோ: சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பேட்மின்டன் போட்டிகள் லக்னோவில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா (16), ஹாங்காங்கின் லோ சின் யான் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய தன்வி, 21-13, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி, அரை இறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி, வெறும் 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, ஜப்பான் வீராங்கனை ஹினா அகேச்சி உடன், அரை இறுதியில் மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, சக இந்திய வீராங்கனை ரக்சிதா ஸ்ரீயை, 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத்தை வென்றார்.

