Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

10வது முறையாக பதவியேற்பு பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: 26 அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நேற்று நிதிஷ்குமார் முதல்வர் பதவி ஏற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நிதிஷ்குமாருக்கு, ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ்குமார் பதவி ஏற்றதும் பாஜ தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா , ஜேடியு தலைவர்கள் விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், பாஜ தலைவர்கள் மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால் , நிதின் நபின் உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பீகாரில் 36 பேர் அமைச்சர்களாக இருக்கலாம் என்றாலும் தற்போது முதல்வருடன் சேர்த்து 27 பேர் பதவி ஏற்றுள்ளனர். பாஜவிலிருந்து 14 பேர், ஜே.டி.யுவிலிருந்து 8 பேர், எல்.ஜே.பியிலிருந்து 2 பேர், எச்.ஏ.எம், ஆர்.எல்.எம்லிருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். நிதிஷ் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம், 3 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மஹுவா தொகுதியில் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவை தோற்கடித்த எல்.ஜே.பி யின் சஞ்சய் குமார் சிங் உட்பட 9 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

கயா டவுனில் இருந்து 9 முறை தேர்வு பெற்ற பாஜ எம்.எல்.ஏ.வான பிரேம் குமார் சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார்.  10வது முறையாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்), ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), மோகன் யாதவ் (மத்தியப் பிரதேசம்), ரேகா குப்தா (டெல்லி) உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

* யார், யாருக்கு அமைச்சர் பதவி?

சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹாவைத் தவிர, முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மங்கல் பாண்டே, நிதின் நபின், சுரேந்திர பிரசாத் மேத்தா ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். கட்சியின் ‘ஒரு நபர், ஒரு பதவி’ கொள்கையின்படி 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த பா.ஜ மாநில தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றார்.

2022ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய போது அமைச்சர் பதவியை இழந்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாராயண் பிரசாத் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். ஜமுய் தொகுதியில் வெற்றி பெற்ற சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான ஷ்ரேயாசி சிங் , பாஜ தலைவர்கள் அருண் சங்கர் பிரசாத், டாக்டர் பிரமோத் குமார், லக்கேந்திர குமார் ரௌஷன், சஞ்சய் சிங் டைகர், ராம நிஷாத் ஆகியோர் புதிய முகங்கள்.

கூட்டணி கட்சியில் இருந்து ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் மீண்டும் அமைச்சரானார். சிராக் பாஸ்வான் கட்சியில் இருந்து சஞ்சய் குமார் பாஸ்வான் மற்றும் மஹுவாவில் தேஜ் பிரதாப் யாதவை தோற்கடித்த சஞ்சய் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.

ஆர்எல்எம் கட்சியில் இருந்து தீபக் பிரகாஷ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். ஆர்எல்எம் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் இருந்தாலும் தீபக் பிரகாஷ் தற்போது இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களில் திலீப் ஜெய்ஸ்வால், டாக்டர் பிரமோத் குமார், அசோக் சவுத்ரி,சந்தோஷ் சுமன் ஆகியோர் சட்ட மேலவை உறுப்பினர்களாக உள்ளனர். முதல்வர் நிதிஷ்குமாரும் மேலவை உறுப்பினர்தான்.

* பீகார் காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மவுனவிரதம்

பீகாரில் 10வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவி ஏற்ற நேரத்தில் தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சோகத்தில் ஜன்சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நேற்று மவுன விரதம் மேற்கொண்டார். மேற்கு சாம்பராண் மாவட்டத்தில் மகாத்மாகாந்தி மவுன விரதம் இருந்த பிதிஹர்வா ஆசிரமத்தில் அவர் மவுன விரதம் இருந்தார்.

* தோல்விக்கு பிறகு மனம் திறந்தார் நிதிசுக்கு தேஜஸ்வியாதவ் வாழ்த்து

பீகார் முதல்வர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வியாதவ் பங்கேற்கவில்லை. ஆனால் தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்முறையாக எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வியாதவ், முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,’ மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய அரசு பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்’ என்றார்.