275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு
சென்னை: பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தினமும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் 30 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு மட்டும் தினமும் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் ஆண்டுக்கு அரசுக்கு 95 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பதிவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது சாதாரண குற்றத்திற்காக சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.2 ஆயிரம் கையில் வைத்திருந்த டிஐஜி பால்பாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குற்றம் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது. அவரது சட்டைப் பையில் இருந்தது அவரது பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இருந்த செயலாளர், குற்றம் செய்ததற்கான பலனை டிஐஜி வழங்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதேபோல, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியதற்காக குன்றத்தூர் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்று சிறிய சிறிய நிர்வாக தவறுகளுக்காக பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 275 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டால், அவரை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விதியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறுதான் பல்வேறு துறைகளிலும் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு பணிகளில் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பதிவுத்துறையில் மட்டும் சிறிய சிறிய நிர்வாக தவறுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு மேல் ஆனவர்கள் மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பதிவுத்துறையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் சில மாதங்களிலேயே பணியில் எடுத்துக் கொள்ளப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். இதனால், இது குறித்து சார்பதிவாளர் சங்கங்களில் பல்வேறு உறுப்பினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜை சார்பதிவாளர் அலுவலக சங்க உறுப்பினர்கள் இரு நாட்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினர். அப்போது சார்பதிவாளர்களின் குறைகளை எடுத்துக் கூறினர். மேலும் சார்பதிவாளர் சங்க நிர்வாகிகள் ஐஜியிடம் ஒரு மனு அளித்துள்ளனர்.
அப்போது சங்க நிர்வாகிகளை பதிவுத்துறை ஐஜி திட்டியதோடு, அறையை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதோடு நிற்காமல் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீசையும், பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் வழங்கியதாக கூறப்படுகிறது. பதிவுத்துறை வரலாற்றில், ஒட்டுமொத்தமாக இதுவரை ஊழியர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதில்லை. முதன்முறையாக நேற்று காலை முதல் மாலை வரை தமிழகம் முழுவதும் ஊழியர்கள் அனைவரும் தங்களது உடைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர். காலையில் சிறிது நேரம் தங்களது அலுவலகம் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ஓரிரு நாட்களில் சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.