சுஷாந்த் மரணத்தில் ரியா விடுவிப்புக்கு எதிர்ப்பு; சிபிஐ அறிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடிவு: ஜோதிடர் சொன்னதாக சகோதரி திடுக் தகவல்
மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரி கூறியுள்ளது, இந்த வழக்கில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தி, கடந்த மார்ச் மாதம் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், சுஷாந்தின் மரணத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்றும், இது தற்கொலைதான் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தற்கொலைக்குத் தூண்டுதல், நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்களையும் வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், சிபிஐயின் இந்த முடிவை ‘கண்துடைப்பு அறிக்கை’ எனக் கூறி நிராகரித்த சுஷாந்தின் குடும்பத்தினர், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி அளித்த பேட்டியில், ‘சுஷாந்த் மரணிப்பதற்கு முன்பே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் எங்கள் குடும்பத்தை எச்சரித்தார்.
மார்ச் மாதத்திற்குப் பிறகு அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்று அவர் கூறினார். அதேபோல, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜோதிடரும் இதேபோன்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். அந்த இரண்டு ஜோதிடர்களுமே, சுஷாந்த் இரண்டு நபர்களால் கொலை செய்யப்பட்டார் என்று என்னிடம் கூறினார்கள். மேலும், சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு நடிகை ரியா சக்கரபோர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நீ மிகவும் உயரமாகப் பறக்கிறாய், உனது சிறகுகள் வெட்டப்பட வேண்டும்’ என்ற பொருள்படும் விசித்திரமான கவிதை ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதுபோன்ற பதிவுகள் எமக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளார்.
 
  
  
  
   
