உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்: அடுத்த 15 மாதங்கள் பதவி வகிப்பார்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த 15 மாதங்கள் சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் கடந்த அக்டோபர் 30ம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி முர்மு, புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடவுளின் பெயரால் இந்தியில் பதவியேற்றுக் கொண்டார்.
சூர்யகாந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 2026 பிப்ரவரி 9ம் தேதி 65 வயதை எட்டும் அவர் அன்றைய தினம் பதவி விலகுவார். புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியின் நிறைவாக, ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்னாள் தலைமை நீதிபதி கவாய் மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் வழக்கமான குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நீதிபதி சூர்யகாந்த் பிப்ரவரி 10, 1962 அன்று அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 2011ம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி, அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற சூர்யகாந்த் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளில் பங்களித்துள்ளார்.
* முதல் நாளில் 17 வழக்கு
தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்த் நேற்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் நம்பர்-1 நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். முதல் நாளில் அவர் 17 வழக்குகளை விசாரித்தார். முன்னாக வழக்கறிஞர்கள் பலரும் தலைமை நீதிபதி சூர்யகாந்தை வரவேற்றனர். ‘தலைமை நீதிபதியான விவசாயியின் மகனை வரவேற்கிறோம்’ என்றனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘வழக்குகளை அவசரமாக பட்டியலிட விரும்பினால் அதற்கான காரணத்துடன் ஒரு குறிப்பை எழுதி பதிவாளரிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம். மரண தண்டனை போன்ற மிக முக்கியமான வழக்குகளை மட்டும் வாய்மொழியாக அவசர விசாரணையை கேட்கலாம்’’ என கேட்டுக் கொண்டார்.
* காரை விட்டுச்சென்ற கவாய்
ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தலைமை நீதிபதிகளுக்கான அதிகாரப்பூர்வ மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்த முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், விழா முடிந்ததும் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார். இதன் மூலம் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிகாரப்பூர்வ பென்ஸ் காரை உடனடியாக பயன்படுத்த முடிந்தது. இதுவரை இல்லாத நடைமுறையை கவாய் தொடங்கி வைத்துள்ளார்.



