Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கண்காணிப்பு குழுவில் தமிழ்நாட்டை சேராத ஐபிஎஸ் அதிகாரிகள் உரிய சட்ட ஆலோசனையை பெற்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்: பேரவையில் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவில் தமிழ்நாட்டை சேராத ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக, உரிய சட்ட ஆலோசனை பெற்று உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும் என்று செல்வப்பெருந்தகை பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பான விவாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்) பேசியதாவது: கரூர் துயரச் சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த 3 பேர் அடங்கிய குழுவில், தமிழ் படித்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கக்கூடாது என்பது சில பேதங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டை சார்ந்த அதிகாரிகளெல்லாம் இந்தியா முழுவதும் பேரும், புகழும் பெற்ற அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். இந்த பேதத்தை எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது. இதில் தலையிட்டு இப்படிப்பட்ட பேதங்கள் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாம் முறையிட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பு குழுவிலே தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கக்கூடிய ஐ.பி.எஸ் அதிகாரி இடம்பெறுவது குறித்து செல்வப்பெருந்தகை கருத்துக்களை பேசியிருக்கிறார்.

இன்னும் சொன்னால், தமிழ்நாட்டு மக்களுக்கே இது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று உச்ச நீதிமன்றத்தை நிச்சயமாக இந்த அரசு அணுகும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்வப்பெருந்தகை: தவெகவினர் கேட்ட 4 இடங்களை நான் பார்த்தேன். அங்கெல்லாம் வேண்டாம். அதைவிட பெரிய இடத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று காவல்துறை கொடுத்துள்ளனர். இதுதான் நிர்வாகத் திறமை.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அரசியல் செய்ய வேண்டுமென்று வாயில் வந்ததையெல்லாம் பொது வெளியில் பேசுகிறார்கள் என்றால், இதற்கும் சேர்த்து மக்கள் டெபாசிட் வாங்குவதற்கு வாய்ப்பில்லாமல் அந்தக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கக்கூடிய விலையாக இருக்கப் போகிறது. ஆகவே, காவல் துறை கண்ணும்கருத்துமாக இருந்தார்கள். அந்த மக்களைப் பாதுகாத்திருக்கிறார்கள். எனவே, கரூர் சம்பவத்தில் முதல்வர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் இயக்கம் துணையாக இருக்கும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்: உறுப்பினர் செல்வபெருந்தகை, காவல் துறை சிறப்பாக பணியாற்றியது குறித்து இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் ஒன்றை விட்டுவிட்டார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசுகிறபோது, காவல் துறை பாதுகாப்பு சரியாக கொடுக்கவில்லை என்று காவல் துறையை குறை சொல்லி பேசியிருக்கிறார்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் பேச்சை தொடங்குவதற்கு முன்பே, பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே காவல் துறைக்கு முதலில் எனது சல்யூட் என்று அடித்துவிட்டு, சரியான பாதுகாப்பு தந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுத் தான் பேசினார் என்பதையும் நான் இந்த அவையிலே பதிவு செய்கிறேன்.

செல்வபெருந்தகை: அரசியல் செய்வதற்காக ஓர் இடத்தில் பேசியதையே மறந்து விடுகிறார்கள்.

என்ன பேசினோம் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். அப்படியென்றால், அது உண்மையான, நேர்மையான பேச்சில்லை என்பது தான் அர்த்தம். முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் இங்கிருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லோரும் தமிழ்ச் சமூகத்தின்மீது அக்கறை உள்ளவர்கள். அரசியல் மீது அக்கறை உள்ளவர்கள் கிடையாது. தமிழ்ச் சமூகம் மேன்மையடைய வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை, வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.