கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் பெய்த கன மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பம் அருகே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுருளி அருவியில் ஒவ்வொரு ஆண்டும் கோடையை தவிர்த்து ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டும். அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக அருவி இருப்பதால்,தண்ணீர் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளது. தேனி மாவட்டத்தின் சின்ன குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவியில் குளிக்க தினமும் திரளாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அந்த சமயங்களில் மட்டும் குளிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில நாட்களில் வெள்ள நீர் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர். தற்போது நேற்று இரவு மேகமலை, இரவங்கலாறு ஹைவேவிஸ், மணலாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.