*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கம்பம் : கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும், புனித ஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு, தினமும் வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் இங்கு தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, தைப்பூசம், தை அமாவாசை, மஹாளய அமாவாசை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் இங்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் புனித அருவியில் நீராடி விட்டு இங்குள்ள சுருளி வேலப்பர் கோயில், பூத நாராயணன் கோயில், கைலாயநாதர் குகை, ஆதி அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். இத்தகைய விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் இங்குள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் இருந்து பூத நாராயணன் கோயில் வரை உள்ள சாலையின் இரு புறமும், பெரும்பாலானோர் கடைகளை வைத்து நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ”ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் இரு புறமும் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் முன்பாக பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றால் கடைகாரர்கள் அதற்கு அடாவடியாக கட்டணம் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.