நெல்லை: நெல்லையில் கவின் ஆவணக் கொலை வழக்கில் ஏற்கனவே சுர்ஜித் அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் (27), ஆணவப் படுகொலை வழக்கில், கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நெல்லை மாவட்ட 2-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமா நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து இருவரையும் பாளை. பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். நேற்று காலை முதல் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. இதற்காக, சிபிசிஐடி எஸ்பி ஜவகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். பிற்பகல் 12.40 மணிக்கு நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த அவரது முன்னிலையில், டிஎஸ்பிக்கள் மதுரை அருணாச்சலம், நெல்லை ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர்கள் உலகராணி, பார்வதி, சேகர், சந்தானலட்சுமி மற்றும் முக்கிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலைக்கு யாரேனும் சதி திட்டம் தீட்டி கொடுத்தார்களா?, வேறு யாரேனும் கொலையில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்த 50க்கும் மேற்பட்ட கேள்விகள் 2 பேரிடமும் கேட்கப்பட்டுள்ளது. பின்னர், கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சுர்ஜித்தை அழைத்துச் சென்றும் விசாரணை செய்தனர். தொடர்ந்து இன்று மாலை வரை விசாரணை நடந்தது. இந்நிலையில், சுர்ஜித், அவரது தந்தை இருவரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்த நிலையில், தற்போது 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன். ஏற்கெனவே சுர்ஜித் அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஜெயபாலனை சிபிசிஐடி கைது செய்தது.