சென்னை: தமிழில் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததால் காதல் திருமணம் செய்த சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் இருக்கின்றனர். தற்போது ‘தியா சூர்யா’ என்ற பெயரில் தியா இயக்கும் படத்துக்கு ‘லீடிங் லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சூர்யா, ஜோதிகாவுக்கு சொந்தமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி வழங்கும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட்டில் பணியாற்றும் அப்பெண்களின் அனுபவங்களை பற்றியும் விவரிக்கும் டாக்குமெண்ட்ரி டிராமாவாக படம் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வரும் இப்படம், ஆஸ்கர் குவாலிபையிங் ரன்னுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது. வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் தியா சூர்யாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
+
Advertisement