மாமல்லபுரம்: ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால், வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய அலைச்சறுக்கு (சர்ஃபிங்) போட்டி, ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடந்து வருகிறது. இதில் ஹீட் 1-ல் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிகளில் ரமேஷ், 12.60 புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்த போட்டியில், தென் கொரியாவை சேர்ந்த கனோவா ஹீஜே, 15.17 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்தோனேஷியாவை சேர்ந்த பஸார் அர்யானா 14.57 புள்ளிகள் பெற்று 2ம் இடத்துடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ரமேஷ் புதிஹால் அடைந்துள்ளார்.