Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்: மீனம்பாக்கம் ஆர்டிஓ அதிரடி

ஆலந்தூர்: தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. எனினும், ஒருசில ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நேற்று மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலத்துக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று முழுவதும் தென்சென்னை பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 108 ஆம்னி பேருந்துகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது, கூடுதல் பாரம் ஏற்றப்பட்டது, புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாதது உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய 52 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளித்து, அவற்றுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் நடவடிக்கை மேற்கொண்டார்.