சூரத்: தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக நகரங்களுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். இந்த சமயங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போதுமானதாக இல்லாததாலும், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிவதாலும், ரயில் நிலையங்கள் திணறுவதும், பயணிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உத்னா ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 19) மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி, சத் பூஜை பண்டிகைகளைக் கொண்டாடவும், பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டியும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதன் காரணமாக, ரயில் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் வரிசை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது.
பல மணி நேரம் காத்திருந்தும் ரயில்களில் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சமூக வலைதளங்களில் பரவிய காணொலிகளில், கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி மக்கள் தவிப்பதும், ரயில்களுக்குள் இடம் பிடிக்கப் போராடுவதும் போன்ற காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தின. எதிர்பார்ப்பை மீறிய கூட்டத்தால் ரயில்வே நிர்வாகத்தின் அனைத்து ஏற்பாடுகளும் தோல்வியடைந்தன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.